சான் ஃபிரான்சிஸ்கோ: கலிஃபோர்னியாவில் பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதால் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின் பெரும் பகுதி இருளில் மூழ்கியது.
டிசம்பர் 20ஆம் தேதி மின்தடை ஏற்பட்டதாக நகரத்தின் அவசரகால நிர்வாகப் பிரிவு, எரிசக்தி விநியோக அமைப்பும் தெரிவித்தன.
ஏறக்குறைய 800,000 மக்கள் வசிக்கும் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் சுமார் 125,000 குடியிருப்பாளர்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டனர் என்று பசிபிக் எரிவாயு, மின்சக்தி நிறுவனம் கூறியது.
“சான் ஃபிரான்சிஸ்கோவில் பெரிய அளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. உயிர்ப் பாதுகாப்பு அவசரத்திற்கு 9-1-1ஐ மட்டும் அழைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். குளிர்சாதனப் பெட்டியை மூடி வைக்கவும், மின்னேற்ற அதிர்வுகளைத் தடுக்க முக்கிய சாதனங்களை அணைத்து வைக்கவும்,” என்று சான் ஃபிரான்சிஸ்கோ அவசரகால நிர்வாகப் பிரிவு தனது ஃபேஸ்புக் பதிவில் கேட்டுக் கொண்டது.
ஆனால் ஒரு மணி நேரத்திற்குள் மின் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது.
சான் பிரான்சிஸ்கோ நகரத்தின் 414,000 வாடிக்கையாளர்களில் 40,000 பேருக்கு இரவு 9.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் இரவு 1.30 மணி) மின்சாரத் தடை நீங்கியது. இது, 124,000லிருந்து குறைந்தது என்று டிசம்பர் 20ஆம் தேதி பவர்அவுட்டேஜ்.காம் இணையப்பக்கம் தெரிவித்தது.
மின்தடை காரணமாக கடைகள் மற்றும் பொது போக்குவரத்து நிலையங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் ‘வேமோ’ எனும் நிறுவனம், அதன் ஓட்டுநர் இல்லாத டாக்சி சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இதற்கிடையே சான் ஃபிரான்சிஸ்கோ நகரின் மத்தியில் அமைந்துள்ள பசிபிக் கேஸ் & எலக்ட்ரிக் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துக்கொண்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் சான் ஃபிரான்சிஸ்கோ தீயணைப்புத் துறை, எய்ட்த் (எட்டாவது) மற்றும் மிஷன் சாலைகளில் உள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை கேட்டுக் கொண்டது.
மின்சாரத் தடைக்கு, துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

