தோக்கியோ: ஜப்பானின் பிரதமராகத் திருவாட்டி சானே தகாய்ச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் எனும் பெருமை அவரைச் சேரும்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், திருவாட்டி தகாய்ச்சி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
465 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 237 பேர் திருவாட்டி தகாய்ச்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான திரு யொஷிக்கோ நோடாவுக்கு 149 வாக்குகள் கிடைத்தன.
64 வயது திருவாட்டி தகாய்ச்சி, தீவிரப் பழமைவாதக் கொள்கைகள் உடையவர் என்று கூறப்படுகிறது.
ஜப்பானின் முன்னாள் பிரதமரான காலஞ்சென்ற ஷின்சோ அபே, உயிருடன் இருந்தபோது அவரது வழிகாட்டுதலில் திருவாட்டி தகாய்ச்சி படிப்படியாக உயர்ந்தவர்.
அக்டோபர் 4ஆம் தேதியன்று ஆளுங்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அக்டோபர் 10ஆம் தேதியன்று கொமெய்ட்டோ கட்சியுடனான 26 ஆண்டுகால கூட்டணி முறிந்ததை அடுத்து, திருவாட்டி தகாய்ச்சி பிரதமராவது குறித்து சந்தேகம் எழுந்தது.
ஆனால், அடுத்த பத்து நாள்களில் ஒசாக்காவை மையமாகக் கொண்ட ஜப்பானியப் புத்தாக்கக் கட்சியுடன் ஆளுங்கட்சி கூட்டணி சேர்ந்தது.
பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவாட்டி தகாய்ச்சிக்கு வாக்களித்துள்ளபோதிலும் அவரது கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் கட்சிக்கும் எங்களுடன் கூட்டணி சேரும் கட்சிக்கும் ஒரே தேசிய இலக்கு உள்ளது. எனவே, ஜப்பானின் பொருளியலை வலுப்படுத்தி எதிர்காலத் தலைமுறையினரிடம் விட்டுச் செல்லக்கூடிய நாடாக ஜப்பானை வடிவமைக்க ஆவலுடன் இருக்கிறேன்,” என்று கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தெரிவித்தார் திருவாட்டி தகாய்ச்சி.
திருவாட்டி தகாய்ச்சி கூறியதை ஜப்பானியப் புத்தாக்கக் கட்சியின் தலைவரும் ஒசாக்காவின் ஆளுநருமான ஜிரோஃபுமி யோஷிமுரா ஆமோதித்தார். சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, ஜப்பானின் தற்காப்பு அமைச்சராக 44 வயது திரு ஷின்ஜிரோ கொய்சுமி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பல நாட்டுத் தலைவர்களுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பதவி விலகும் ஜப்பானிய பிரதமர் இஷிபா ஷிகெருவுக்கு ஒரு பாராட்டுக் கடிதத்தையும், புதிய ஜப்பானியப் பிரதமர் தகாய்ச்சிவுக்கு ஒரு வாழ்த்துக் கடிதத்தையும் எழுதியுள்ளார்.