தோக்கியோ: ஜப்பானியப் பிரதமராக சானே தகாய்ச்சி பொறுப்பேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் ஜப்பானியப் பிரதமர் பதவியிலிருந்து ஷிகேரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து அடுத்த பிரதமருக்கான தேடல் தொடங்கியது.
இந்நிலையில், சனிக்கிழமை (அக்டோபர் 4) ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) அடுத்த தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் 64 வயது தகாய்ச்சி வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேளாண்துறை அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சூமி, 44 தோல்வி அடைந்தார்.
342 வாக்குகளில் திருவாட்டி தகாய்ச்சிக்கு 185 வாக்குகள் கிடைத்தன. திரு கொய்சூமிக்கு 156 வாக்குகள் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாத வாக்காகப் பதிவானது.
இதற்கு முன்னர் திருவாட்டி தகாய்ச்சி 2021, 2024ஆம் ஆண்டுகளில் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளார். மேலும் அவர் ஜப்பானின் பொருளியல் பாதுகாப்பு அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.
திருவாட்டி தகாய்ச்சி அதிகாரபூர்வமாகப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால், ஜப்பானிய வரலாற்றில் ஒரு பெண் பிரதமராகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்.
“ஜப்பானின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டேன். ஜப்பானிய மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்,” என்று திருவாட்டி தகாய்ச்சி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பானிய அரசியல் களத்தில் நெருக்கடி நீடித்து வருகிறது.
பிரதமராகப் பொறுப்பேற்று ஓராண்டுக்குள்ளேயே அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஷிகேரு இஷிபா.
விலைவாசி உயர்வைத் தொடர்ந்து மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவரது ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது.
தற்போது கூட்டணிக் கட்சியான கெமெய்டோவின் ஆதரவுடன் எல்டிபி கட்சி ஆட்சியில் உள்ளது.
எல்டிபி கட்சித் தலைவராகத் திருவாட்டி தகாய்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்வார். மூன்று ஆண்டுகளுக்கான தலைவர் பதவியில் ஓராண்டு காலத்தை இஷிபா நிறைவு செய்தார்.
எல்டிபி கட்சித் தலைவருக்கான அடுத்த தேர்தல் 2027ஆம் ஆண்டு நடக்கும்.