புதுடெல்லி: ரஷ்யாமீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை உத்தரவுகள் குஜராத்தில் உள்ள ரோஸ்னெஃப்ட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் பாதித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ரஷ்யாமீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருதலைபட்சமான தடைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“இந்தியா எவ்வித ஒருதலைபட்சமான தடைகளையும் ஆதரிக்காது. குடிமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் இந்திய அரசாங்கம் எரிசக்தி விநியோகத்தை மிக முக்கியமான பொறுப்பாகக் கருதுகிறது,” என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்திர் ஜெயிஸ்வால் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.
எந்தவித பாரபட்சமும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்திய திரு ஜெயிஸ்வால், குறிப்பாக எரிசக்தி வர்த்தகத்தில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்றார்.
ரஷ்யாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ரோஸ்னெஃப்ட்டின் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைமீது ஐரோப்பிய ஒன்றியம் தடை உத்தரவு விதித்து எண்ணெய் விலை உச்சவரம்பைக் குறைத்தது. உக்ரேன்மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று.
ரஷ்யாமீது விதிக்கப்பட்ட புதிய தடைகளில் புதிய வங்கிக் கட்டுப்பாடுகளும் ரஷ்யக் கச்சா எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருள்மீதான கட்டுப்பாடுகளும் அடங்கும்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்மீதான விலை ஒரு பீப்பாய்க்கு $60 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் இந்தியா போன்ற நாடுகளுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யைக் விற்க வேண்டிய நிலைக்கு ரஷ்யா தள்ளப்படும்.
ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் இரண்டாம் ஆகப் பெரிய நாடான இந்தியா அதன் மூலம் பயனடையும். இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதிகளில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் 40 விழுக்காடு பங்கு வகிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ரோஸ்னெஃப்ட் நிறுவனம் நயாரா எரிசக்தி நிறுவனத்தில் 49.13 விழுக்காட்டு பங்கை வகிக்கிறது. குஜராத்தின் வடினர் பகுதியில் ஆண்டுக்கு 20 மில்லியன் டன் எண்ணெய்யை சுத்திகரிக்கும் ஆலையையும் 6,750 பெட்ரோல் நிலையங்களையும் நயாரா நிறுவனம் நிர்வகித்து செயல்படுத்துகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளால் நயாரா நிறுவனம் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.
அனைத்துலக கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சி கண்டதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் விலை உச்சவரம்பைக் குறைக்க முயன்றன.

