கோலாலம்பூர்: மலேசியாவின் சரவாக் மாநிலம், மலேசிய ஏர்லைன்சின் துணை நிறுவனமான ‘மாஸ்சுவிங்ஸ்’ விமானச் சேவையைக் கொள்முதல் செய்துள்ளது.
இதன்மூலம் தனக்கெனச் சொந்த விமானச் சேவையை வைத்திருக்கும் முதல் மலேசிய மாநிலம் எனும் பெருமை சரவாக்கைச் சேரும். மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்துடன் சரவாக் புதன்கிழமை (பிப்ரவரி 12) விற்பனை, கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சரவாக் தலைநகர் கூச்சிங்கில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ‘மாஸ்சுவிங்ஸ்’ பெரும்பாலும் போர்னியோ தீவில் விமானச் சேவைகளை வழங்குகிறது. அதன் சேவையை வாங்க சரவாக் செலவிட்ட தொகை குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமம் மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான கஸானா நேஷனலுக்குச் சொந்தமானது.
‘மாஸ்சுவிங்ஸ்’ எனும் பெயரை ‘ஏர் போர்னியோ’வாக சரவாக் மாற்ற இருக்கிறது.
அது முழுச் சேவை விமான நிறுவனமாக மாற்றப்படும் என்று சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி துன் ஒபெங் தெரிவித்தார்.
சரவாக் தனது விமானப் போக்குவரத்துத்துறையை விரிவுபடுத்த இலக்கு கொண்டுள்ளது.
அதனை முன்னிட்டு, புதிய கூச்சிங் அனைத்துலக விமான நிலையம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.