மதினாவில் ஹூதி குழு தாக்கியதாகச் சவூதி அரேபியா குற்றச்சாட்டு

மதினாவில் ஹூதி குழு தாக்கியதாகச் சவூதி அரேபியா குற்றச்சாட்டு

படம்: ராய்ட்டர்ஸ்

02 Oct 2026 - 11:46 am

1 mins read

ரியாத்: ஏமனின் ஹூதி குழு மதினாவில் தாக்கியதாகச் சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.

சவூதி அரேபியாவின் புனித நகரான மதினாவில் மின்விநியோக நிலையமொன்று தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக அந்நாட்டின் தலைமையிலான கூட்டணி வியாழக்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்துள்ளது. தாக்குதலை இஸ்லாமிய நாடுகள் பல கடுமையாகக் கண்டித்துள்ளன.

சனாவையும் ஏமனின் செங்கடலோரப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான் ஆதரவுப் போராளிகள், 2015ல் ஏமன் உள்நாட்டுப் போரில் சவூதி அரேபியா தலையிட்டதிலிருந்து அதன்மீது ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் வீசித் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கத்திற்குச் சவூதி அரேபியா ஆதரவளிக்கிறது. செப்டம்பர் நடுப்பகுதியில் மெக்காமீது ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடத்தியதாக ஹூதி குழுமீது ஏற்கெனவே அது குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஹூதி குழு மறுத்திருந்தது.

மதினாவின் தைபா மின்விநியோக நிலையத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு ஹூதி குழுவினரின் ஆளில்லா வானூர்தித் தாக்குதலே காரணம் என்று கூட்டணியின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி கூறினார். செப்டம்பர் 29ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை மணி 5.22க்குத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

புலனாய்வுச் சோதனையிலும் சேகரிக்கப்பட்ட சான்றுகளிலும் ஹூதி குழு தாக்குதலுக்குத் திட்டமிட்டதும் அதை நடத்தியதும் உறுதியாய்த் தெரியவந்துள்ளதாகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தாக்குதலைத் துருக்கியேவும் சூடானும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
சவூதி அரேபியாஈரான்ஹூதிதாக்குதல்