‘ட்ரோன்’ தாக்குதலால் முக்கிய எண்ணெய்க் குழாயை அடைத்த சவூதி அரேபியா

‘ட்ரோன்’ தாக்குதலால் முக்கிய எண்ணெய்க் குழாயை அடைத்த சவூதி அரேபியா

2 mins read
9b346438-bc2c-459d-838a-c2268b1e08c4
கிழக்கு-மேற்கு எண்ணெய்க் குழாய் தாக்கப்பட்டதால் சவூதி அரேபியா அதனை அடைத்துள்ளது. - படம்: ஜிம் பியாங்கோ எக்ஸ் சமூக ஊடகம்

ஏடன்/துபாய்: மத்திய கிழக்கில் போர் பரவிவருவதை உறுதிப்படுத்தும் விதமாக சவூதி அரேபியா அதன் முக்கிய எண்ணெய்க் குழாயை அடைத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தடைகளை ஏற்படுத்தி வந்ததால் அதற்கு மாற்றாகத் தரை வழியாகக் குழாய்களில் சவூதி அரேபியா அதன் எண்ணெய் விநியோகத்தைத் தொடர்ந்தது.

ஆனால் அந்தக் குழாய்கள் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) ஆளில்லா வானூர்திகளால் (ட்ரோன்) தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றைத் தற்காலிகமாக அடைக்க சவூதி அரேபியா முடிவெடுத்துள்ளது.

ரியாத், மதீனா ஆகிய நகரங்களின் வழியாகச் சென்ற குழாய்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஈராக்கின் பாக்தாத் நகரில் இருந்து செயல்படும் போராளிகள் அந்தத் தாக்குதலை நடத்தியதாக சவூதி அரேபியாவும் ஈராக்கும் குற்றஞ்சாட்டின. அந்தப் போராளிகள் ஈரானின் ஆதரவு பெற்றவர்கள் என்று இரு நாடுகளும் கூறின. அதன் விளைவாக ஒரு ராணுவத் தளபதியை ஈராக் பணியில் இருந்து நீக்கியது.

அரேபிய தீபகற்பத்தில் 1,200 கிலோமீட்டர் தூரம் கிழக்கிலிருந்து மேற்கு வரை அந்த எண்ணெய்க் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் இருநாட்டுப் போரால் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் அந்தக் குழாய் வழியாக சவூதி அரேபியா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வந்தது.

பாதுகாப்பு கருதி அதனை அடைத்துவிட்டதாக சவூதி அரேபியாவின் எரிபொருள் அமைச்சு தெரிவித்தது. அண்மைய மாதங்களில் ஒரு நாளில் ஏறத்தாழ நான்கு முதல் ஐந்து மில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய் அக்குழாய் வழியாக வெளியேற்றப்பட்டது.

உலக அளவிலான விநியோகத்தில் அது நான்கு முதல் ஐந்து விழுக்காடு இருக்கலாம் என கப்பல் நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கணித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சவூதி அரேபியாஈரான்ஈரான் போர்ஈராக்மத்திய கிழக்குபோர்ட்ரோன்ட்ரோன் தாக்குதல்கப்பல் எண்ணெய்கச்சா எண்ணெய்எண்ணெய்க் கப்பல்தாக்குதல்போராளிராணுவம்