தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர் அச்சம்: வெளிநாட்டவர் லெபனானைவிட்டு வெளியேற அறிவுறுத்து

2 mins read
38e0da72-9262-4a72-9fb8-58e4b2e6f92a
லெபனானின் தெற்குப் பகுதியிலுள்ள தேபே எனும் சிற்றூரில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 4) இஸ்ரேல் நடத்திய தாக்குதலையடுத்து, அப்பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளித்தது. - படம்: ஏஎஃப்பி

பெய்ருட்: ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூளலாம் என எதிர்பார்க்கப்படுவதால், லெபனானிலுள்ள தங்கள் குடிமக்கள் உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறும்படி பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சவூதி அரேபியாவும் பிரான்சும் அப்பட்டியலில் இணைந்துள்ளன.

கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் லெபனான் செல்வதைத் தவிர்க்கும்படி பிரெஞ்சு வெளியுறவு அமைச்சு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், ஈரானில் வசிக்கும் தன் குடிமக்களும் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறும்படி பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்கத்திய விமான நிறுவனங்கள் பலவும் லெபனானுக்கும் அவ்வட்டாரத்திலுள்ள மற்ற விமான நிலையங்களுக்குமான தங்களது சேவைகளை நிறுத்திவைத்துள்ளன.

டோஹா - பெய்ருட் தடத்தில் பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என்று கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, லெபனானுக்குச் சுற்றுப்பயணம் சென்றோர் அங்கிருந்து விரைந்து வெளியேறும் நோக்கில் பெய்ருட் விமான நிலையத்தில் திரள்வதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுத்தால், அதற்காக அவை பெருவிலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் தற்காப்பு அமைச்சர் யொவாவ் கேலன்ட் எச்சரித்துள்ளார்.

ஆனால், வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் அதே நேரத்தில் மேலும் நிச்சயமற்ற நிலை ஏற்படாமல் தடுக்க இஸ்ரேலைத் தண்டிப்பது அவசியம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் இருவர் பலி: லெபனான்

இதற்கிடையே, தன் நாட்டின் தெற்குப் பகுதியில் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 5) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கும் லெபனான் தலைநகர் பெய்ருட்டில் ஹிஸ்புல்லா ராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்கர் கொல்லப்பட்டதற்கும் இஸ்ரேலைப் பழிவாங்க ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லெபனான் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், லெபனானிலிருந்து வந்த 30 ஏவுகணைகளை இடைமறித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் முதல் நிகழ்ந்துவரும் ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான சண்டையில் லெபனானில் 549 பேர் கொல்லப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத் தரவுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் குறைந்தது 115 பேர் அப்பாவிப் பொதுமக்கள் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து பதற்றநிலை அதிகரித்து வருவதால், போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு மங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்