ரியாத்/துபாய்: மத்திய கிழக்குப் போரின்போது சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான்மீது சவூதி அரேபியா பல மறைமுகத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை செய்திகளில் வெளிவராத அந்தச் சவூதி அரேபியத் தாக்குதல்கள், ஈரான் மண்ணில் அந்த நாடு நேரடியாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தனது வட்டார எதிரிக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்வதில் சவூதி அரேபியா தற்போது அதிக துணிச்சலுடன் செயல்படுவதை அது காட்டுகிறது.
சவூதி ஆகாயப் படையால் மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதல்கள், கடந்த மார்ச் மாத இறுதியில் நடந்ததாக அந்த விவகாரம் குறித்து விளக்கப்பட்ட மேற்கத்திய அதிகாரிகள் இருவர் கூறினர்.
“சவூதி அரேபியா தாக்கப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட நடவடிக்கையே அது,” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
குறிவைக்கப்பட்ட இலக்குகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இது குறித்தக் கருத்துக் கேட்கப்பட்டபோது, சவூதி வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா என்பது குறித்து நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
ஈரானிய வெளியுறவு அமைச்சும் அதன் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவுடன் வலுவான ராணுவ உறவைக் கொண்டுள்ள சவூதி அரேபியா, பாரம்பரியமாகத் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்க ராணுவத்தையே சார்ந்துள்ளது. இருப்பினும், கடந்த 10 வாரங்களாக நீடித்துவரும் போர், அமெரிக்க ராணுவக் கட்டமைப்பைப் பாதித்துள்ள தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஒரு பலவீனமான நிலைக்குச் சவூதி அரேபியாவைத் தள்ளியுள்ளது.
சவூதி அரேபியா நடத்தியுள்ள தாக்குதல்கள், பூசல் எந்த அளவிற்கு விரிவடைந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆகாயத் தாக்குதல்களைத் தொடங்கியபோது போர் மூண்டது.
அப்போதிருந்து, ஈரான் ஆறு வளைகுடா ஒத்துழைப்பு மன்ற நாடுகள் மீதும் ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை நடத்தியது.
அவற்றில், அமெரிக்க ராணுவத் தளங்கள் மட்டுமல்லாமல், குடியிருப்பு இடங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் ஆகியவையும் தாக்கப்பட்டன.

