சவூதி அரேபியா: அடுத்த 24 மணிநேரத்திற்குள் ஈரானிய ராணுவத் தூதரையும் மூன்று தூதரக ஊழியர்களையும் வெளியேற்ற சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி ஈரானிய ராணுவத்திடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துவிட்டதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு கூறியது.
ஈரான் தொடர்ந்து தனது நாட்டின்மீது தாக்குதல் நடத்துவதை அது சுட்டிக்காட்டியது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடங்கியதிலிருந்து சவூதி அரேபியாவை ஈரானின் பல நூறு ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகளால் தாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றை இடைமறித்துவிட்டதாக சவூதி அரேபிய அதிகாரிகள் கூறினர்.
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதலால் பதற்றம் அதிகரிப்பதோடு தற்போதைய, எதிர்கால உறவில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமைச்சு அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கும் உரிமை சவூதி அரேபியாவுக்கு உள்ளது என்று புதன்கிழமை அன்று சவூதி வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
ஈரானின் அண்மையத் தாக்குதலால் டெஹ்ரானுடனான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.
கடந்த 2023ல் பல ஆண்டு பகைமைக்குப் பிறகு, பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியாக சவூதி அரேபியாவும் ஈரானும் தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக்கொண்டன.
தொடர்புடைய செய்திகள்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து அண்டை வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கியதால் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு விலை எதிர்பாராத அளவுக்குக் கூடியது.

