ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமை சவூதிக்கு உண்டு: இளவரசர்

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமை சவூதிக்கு உண்டு: இளவரசர்

படம்: ஏஎஃப்பி

19 Mar 2026 - 4:37 pm

2 mins read

ரியாத்: ஈரானிலிருந்து தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் வானூர்தித் தாக்குதல் நடத்தப்படுவதற்குப் பதிலடியாக சவூதி அரேபியா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை என அதன் வெளியுறவு அமைச்சர் ஃபைசால் பின் ஃபர்ஹான் தெரிவித்துள்ளார்.

சவூதி அரபிய இளவரசருமான அவர், மத்திய கிழக்கு வட்டார வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அந்தக் கூட்டம் ரியாத்தில் வியாழக்கிழமை (மார்ச் 19) நடைபெற்றது.

ஈரான் தனது அண்டை நாடுகளைத் தாக்குவதன் மூலம் அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க முயல்வதாக அவர் கூறினார்.

“ஈரானின் அழுத்தத்திற்கு சவூதி அரேபியப் பேரரசு அடிபணியப் போவதில்லை. மாறாக, அதனால் எதிர்விளைவுகளே ஏற்படும்.

“தேவைப்படும்போது ராணுவ நடவடிக்கை எடுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது என்பதை நாங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.

“நிலைமை குறித்து அரச தந்திரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் வேளையில் ரியாத் குறிவைக்கப்படுவது, அரச தந்திரம் குறித்து ஈரான் எப்படி உணர்ந்துள்ளது என்பதற்கான மிகத் தெளிவான அறிகுறி இது.

“தனது அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈரானுக்கு நம்பிக்கை இல்லை,” என்றார் திரு ஃபைசால்.

மேலும், வளைகுடாவில் பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படுவதை அவர் கண்டித்தார். அதேசமயம், பொதுமக்களின் இடங்களை அல்ல, அமெரிக்கத் தளங்களையே குறி வைக்கிறோம் என ஈரான் நியாயப்படுத்தும் கருத்து பலவீனமானது என்றார் அவர்.

“சவூதி அரேபியாவும் வளைகுடா நாடுகளும் மிரட்டலுக்கு அடிபணியாது. பதற்றம் அதிகரித்தால் பதிலடி தரப்படும்,” என்றும் அவர் எச்சரித்தார்.

ஈரான் புதன்கிழமை (மார்ச் 18) அதிகமான தாக்குதலை நடத்தியதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. குறிப்பாக, தலைநகரில் குண்டுகள் பலமாக வீசப்படுவதை கேட்க முடிந்தது என்றும் ஏவுகணைகளை தனது தற்காப்பு அமைச்சு இடைமறித்தது என்றும் சவூதி அரேபியா கூறியது.

மத்திய கிழக்குப் போரின் விளைவு குறித்துப் பேச வட்டார வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை இளவரசர் ஃபைசால் கூட்டினார். அதில், பத்துக்கும் மேற்பட்ட அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
சவூதி அரேபியாஈரான்வளைகுடா