உலகின் ஆகப்பெரிய கட்டுமானச் சந்தையாக சவூதி அரேபியா

உலகின் ஆகப்பெரிய கட்டுமானச் சந்தையாக சவூதி அரேபியா

1 mins read
2ed5b815-8ce1-4145-a8aa-ab23dd3e1fdc
சவூதியின் மொத்த கட்டுமான உற்பத்தியின் மதிப்பு, 2028 இறுதிக்குள் US$181.5 பில்லியனை எட்டும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. - படம்: புளூம்பெர்க்

ரியாத்: உலகின் ஆகப்பெரிய கட்டுமானச் சந்தையாக சவூதி அரேபியா உருவெடுக்கவுள்ளது.

பொருளியலை மறுசீரமைக்கவும் பல்வகைப்படுத்தவும் கட்டுமானத் திட்டங்களில் சவூதி பெருவாரி பணத்தைக் கொட்டுவதாக சொத்துச் சந்தை ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் தெரிவித்துள்ளது.

சவூதியின் மொத்த கட்டுமான உற்பத்தியின் மதிப்பு, 2028 இறுதிக்குள் US$181.5 பில்லியனை எட்டும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதாக லண்டனைச் சேர்ந்த அந்நிறுவனம் திங்கட்கிழமை (ஜூன் 24) வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது. இது, 2023ல் இருந்த நிலையைவிட கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகம்.

கட்டுமான உற்பத்தியின் பெரும்பகுதி, குடியிருப்புச் சொத்துகளில் இருந்தும் பெரிய அளவிலான திட்டங்களில் இருந்தும் வரக்கூடும். எண்ணெய் வளத்தைச் சார்ந்துள்ள சவூதிப் பொருளியலை உருமாற்ற பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் இலக்குகளின் ஒரு பகுதியாக இவை அமையும்.

‘தொலைநோக்குப் பார்வை 2030’ என அழைக்கப்படும் திட்டம் வெற்றியடைய, அதிகரித்துவரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, US$1.25 டிரில்லியன் மதிப்புக்கு மேலான கட்டுமானத் திட்டங்களை சவூதி தொடங்கி வைத்துள்ளதாக நைட் ஃபிராங்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறியது.

அத்தகைய திட்டங்களில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படாமலும் சில திட்டங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ள வேளையில், 2030 காலக்கெடு நெருங்கிவரும் வேளையில் சவூதி பணிகளை வேகப்படுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்