பேங்காக்: சவூதி அரேபியா மீதான அண்மைய தாக்குதல்கள் எல்லா இடங்களிலும் உள்ள மக்களைப் பாதிக்கக்கூடும் என்று அனைத்துலகப் பண நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவர் கிறிஸ்டலினா ஜியோர்ஜீவா புதன்கிழமை (அக்டோபர் 14) கூறியுள்ளார்.
எரிசக்தி வளம் நிறைந்த வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள அந்தப் பூசலால், பரவலான பொருளியல் கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், அவரது கருத்து வந்துள்ளது.
அண்மைய நாள்களில் சவூதி தலைமையிலான கூட்டணிக்கும் ஏமனின் ஹூதிகளுக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், எரிசக்தி வசதிகள் ஆகியவைமீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வார இறுதியில் ரியாத்தின் அனைத்துலக விமான நிலையத்தின்மீது ஹூதிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். விமானச் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆக மோசமான தாக்குதல் அது.
பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையச் சம்பவங்கள், உலகளாவிய பொருளியல் வளர்ச்சியில் மத்திய கிழக்கு நெருக்கடியின் தாக்கத்தைப் பற்றிய அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.
பேங்காக்கில் நடைபெற்ற அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்தரக் கூட்டத்தின்போது செய்தியாளர் சந்திப்பில் ‘ஐஎம்எஃப்’ நிர்வாக இயக்குநர் ஜியோர்ஜீவா பேசினார்.
“சவூதி அரேபியாவின் பொருளியல் இந்த வட்டாரத்திற்கும் உலகத்திற்கும் மிகவும் முக்கியமானது,” என்று அவர் கூறினார்.
“அந்த வகையில், இந்தப் பூசல்கள் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொருவருக்கும் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்,” என்றும் அவர் எச்சரித்தார்.
