ரியாத்: சவூதி அரேபிய இளவரசர் அல்வாலீது பின் காலீது பின் தலால், சனிக்கிழமை (ஜூலை 19) காலமானார். அவருக்கு வயது 36.
‘தூங்கும் இளவரசர்’ என்று அழைக்கப்பட்ட அவர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நினைவற்ற ‘கோமா’ நிலையில் இருந்தார்.
லண்டனில் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து நினைவிழந்த இளவரசருக்கு ரியாத்தில் உயிர்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டது.
மாண்ட இளவரசருக்குத் திங்கட்கிழமை (ஜூலை 21) இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குக்கான வழிபாடுகளில் ஆண்கள் ரியாத்திலுள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா பள்ளிவாசலில் கலந்துகொள்வர். பெண்கள் மன்னர் ஃபைசால் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் நடைபெறும் வழிபாட்டில் கலந்துகொள்வர்.
இளவரசர் அல்வாலீது பின் காலீது பின் தலால், 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி பிறந்தார்.
சவூதி அரேபிய அரச குடும்பத்தில் முக்கியமானவராகக் கருதப்படும் இளவரசர் காலீது பின் தலால் அல் சவூதின் மூத்த மகன் அவர். மேலும், நவீன சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல்அஸீஸின் கொள்ளுப் பேரனுமாவார்.
2005ஆம் ஆண்டு லண்டன் ராணுவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இளவரசர் அல்வாலீது மோசமான கார் விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு வயது 15.
தொடர்புடைய செய்திகள்
அந்த விபத்தை அடுத்து மூளையில் ரத்தக் கசிவு உள்ளிட்ட மருத்துவச் சிக்கல்களால் நினைவை இழந்து ‘கோமா’ நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பின்னர், ரியாத்திலுள்ள மன்னர் அப்துல்அஸீஸ் மருத்துவ நகருக்கு மாற்றப்பட்ட இளவரசருக்கு உயிர்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்டன.
குடும்பத்தினர், உலகெங்குமிருந்து மருத்துவ வல்லுநர்களின் உதவியை நாடிய நிலையில் இளவரசருக்கு இறுதிவரை நினைவு திரும்பவேயில்லை.
2015ஆம் ஆண்டு, உயிர்காப்புக் கருவிகளை அகற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியபோதும் அவரது தந்தையான இளவரசர் காலீது, அதனை உறுதியாக நிராகரித்துவிட்டார். பிறப்பும் இறப்பும் இறைவனின் கரங்களில் இருப்பதாகக் கருதும் அவர், இளவரசர் மீண்டுவரும் சாத்தியம் இருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தார்.
2019ல் இளவரசர் அல்வாலீதின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது கைவிரல் அசைவுகளும் தலையைத் திருப்பியதும் சிறிது நம்பிக்கையூட்டின. இருப்பினும் அதற்குமேல் முன்னேற்றம் ஏதுமில்லை.