ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பள்ளி இலவச உணவுத் திட்டம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 80 மில்லியன் பேரைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் உணவுத் துறையைக் கவனிக்கும் மூத்த அமைச்சர் திங்கட்கிழமை (டிசம்பர் 29) தெரிவித்தார்.
இலக்கை அடைவதில் திட்டம் மேலும் பின்தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதத் தொடக்கத்துக்குள் சுமார் 55 மில்லியன் பேரைச் சென்றடைவது இத்திட்டத்தின் இலக்கு என்று அமைச்சர் ஸுல்கிஃப்லி ஹசான் செய்தியாளர்களிடம் கூறினார். 2026ஆம் ஆண்டுக்கான உணவுச் சேமிப்பு குறித்து அரசாங்க அமைப்புகளுடன் சந்திப்பு நடத்திய பிறகு அவர் பேசினார்.
இந்தப் பள்ளி இலவச உணவுத் திட்டம், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் பிரசாரத்தில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். 83 மில்லியன் சிறார், கர்ப்பிணிகள் போன்றோருக்கு உணவை விநியோகிப்பது திட்டத்தின் இலக்காகும்.
எனினும், அதிகச் செலவு, உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரிப்பது ஆகிய காரணங்களால் இத்திட்டம் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் பள்ளி இலவச உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 11,000க்கும் அதிகமான சிறார் நச்சுணவுப் பிரச்சினைக்கு ஆளாகிவிட்டதாக இத்திட்டத்தைக் கவனித்துவரும் அமைப்பின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2025ஆம் ஆண்டிறுதிக்குள் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த திரு பிரபோவோ திட்டமிட்டிருந்தார். ஆனால், சமையலறைப் பற்றாக்குறை காரணமாகக் கடந்த அக்டோபர் மாதத்துக்கான இலக்கு குறைக்கப்பட்டது. அம்மாதத்துக்குள் கிட்டத்தட்ட 70 மில்லியன் பேரைச் சென்றடையத் திட்டமிடப்பட்டது.
இப்போது இலக்கு மறுபடியும் குறைக்கப்பட்டதற்கான காரணத்தைத் திரு ஸுல்கிஃப்லி தெரிவிக்கவில்லை.

