ஈப்போ: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மலேசிய தேசிய சேமிப்பு வங்கியின் அதிர்ஷ்டக் குலுக்கில் 1 மில்லியன் ரிங்கிட் பரிசை வென்றுள்ளார்.
பட்டர்வொர்த்தைச் சேர்ந்த எம். முனீஸ்வரன், 56, எனப்படும் அவர் வரலாற்றுப் பாட ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
‘பேங்க் சிம்பனன் நேஷனல்’ (பிஎஸ்என்) எனப்படும் தேசிய சேமிப்பு வங்கியின் மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசு கிடைத்திருப்பது ஆசிரியர் தினத்தில் அவருக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.
ஈப்போவில் கடந்த சனிக்கிழமை (மே 2) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கான காசோலை வாங்க வந்திருந்த முனீஸ்வரன், “வழக்கமாக மாதாந்திரக் குலுக்கல்களைக் கவனித்து வருவேன். பரிசாகக் கார் ஒன்றை எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது அதற்கும் மேல் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதனை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை,” என்றார்.
தேசிய சேமிப்பு வங்கியில் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோதே கணக்குத் தொடங்கி அதில் பணம் போட்டு வந்ததாக திரு முனீஸ்வரன் கூறினார்.
“முதலில் 100 ரிங்கிட், 200 ரிங்கிட் என்று மாதாமாதம் சேமித்து வந்த நான் பின்னர் எனது குடும்பத்தினருக்கும் அதில் கணக்குத் தொடங்கினேன். சேமிக்கும் பழக்கத்தை இன்றுவரை தொடர்ந்து வருகிறேன். முப்பது ஆண்டுகளாக அந்தச் சேமிப்பிலிருந்து பணம் எடுத்ததில்லை,” என்றார் அவர்.

