நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பொதுப் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் பிப்ரவரி 23ஆம் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக நியூயார்க் நகரில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக அந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிப்ரவரி 22ஆம் தேதி இரவு பலத்த காற்றுடன் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து நகரில் உள்ள பள்ளிகளை மூடவேண்டுமா என்று அதிகாரிகள் முதலில் யோசித்தனர்.
ஆனால் பனிப்பொழிவின் கடுமையைக் கருத்தில்கொண்டு வகுப்புகளை ரத்துசெய்வதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
வீட்டிலிருந்தவாறு பாடங்களைக் கற்பதற்கான கருவிகளைப் பல பள்ளிகள் மாணவர்களுக்கு முன்கூட்டியே கொடுக்கவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
வகுப்புகளை ரத்துசெய்வதன் மூலம் குளிர்கால விடுமுறைக்கு வீடு திரும்பும் பள்ளி ஊழியர்களும் குடும்பங்களும் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, நியூயார்க் மேயர் சோரன் மம்தானி, பிப்ரவரி 23ஆம் தேதி பிற்பகல் வரை அவசியமற்ற பயணங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று பிப்ரவரி 22ஆம் தேதி அறிவித்தார்.
இருப்பினும், பனிப்பொழிவுக் காலத்தின்போது விடுமுறையை எப்போது அறிவிப்பது என்ற குழப்பம் நகர அதிகாரிகளிடையே ஏற்படும்.
தொடர்புடைய செய்திகள்
நியூயார்க் மாநில சட்டப்படி நியூயார்க் நகரில் திட்டமிடாமல் அறிவிக்கப்படும் ஒவ்வொரு விடுமுறைக்கும் மாணவர்கள் பின்னாள்களில் கூடுதல் நாள் பள்ளிக்குத் திரும்பவேண்டும்.
ஜனவரி இறுதியில் பனிப்புயல் ஏற்பட்டபோது மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து பாடம் கற்கவேண்டும் என்று திரு மம்தானி அறிவித்தது பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

