கராச்சி: பருவம் தப்பிய பலத்த மழை காரணமாக பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரான கராச்சியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
அரபிக் கடலில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்தத் தாழ்வுநிலை சூறாவளிக் காற்றை உருவாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
வியாழக்கிழமை இரவில் கராச்சி நகரின் சில பகுதிகளில் 147 மில்லிமீட்டர் (5.79 அங்குலம்) மழை பதிவானதாக நகர மேயர் முர்டாஸா வஹாப் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
மழை பெய்வதாலும் சூறாவளி மிரட்டுவதாலும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களையும் கடலோடிகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் ‘ரான் ஆஃப் கட்ச்’ பகுதியின் கடல் பகுதியில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்தம் வெள்ளிக்கிழமை தீவிர புயல்காற்றாக உருவெடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையமும் குறிப்பிட்டு இருந்தது.
அவ்வாறு உருவாகும் புயல் அடுத்த இருநாள்களில் வடமேற்கே அரபிக்கடலை நோக்கி நகரும் என்றும் அது தெரிவித்து இருந்தது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் பரந்து விரிந்த உப்புப் பாலைவனமே ‘ரானா ஆஃப் கட்ச்’.