தீவிர புகைமூட்டக் கண்காணிப்புடன் ஐந்து மலேசிய மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

தீவிர புகைமூட்டக் கண்காணிப்புடன் ஐந்து மலேசிய மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

படம்: ஏஎஃப்பி

18 Oct 2026 - 8:59 pm

1 mins read

கோலாலம்பூர்: சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பாகாங், பினாங்கு ஆகிய மாநிலங்களில் கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள், திங்கட்கிழமை (அக்டோபர் 19) முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் வெளிப்புற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் மாநிலக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளி நிர்வாகிகள் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டின் அளவுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் ஆபத்தில் சிக்கக்கூடிய மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

“தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் அல்லது பாதுகாப்பாளர்கள், பள்ளிக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதற்கான தெரிவைத் தேர்வு செய்யலாம்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நம்பத்தகுந்த, ஆக அண்மைய தகவல்களைப் பெற அனைத்துத் தரப்பினரும் அதிகாரபூர்வ ஊடகங்கள் அல்லது சம்பந்தப்பட்ட பள்ளிகளை மட்டுமே சார்ந்திருக்குமாறு சிலாங்கூர் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் துறை, நாட்டில் தற்போது நிலவி வரும் புகைமூட்டம் காரணமாக, இக்காலகட்டத்தில் நடத்தப்படவிருந்த கல்விப் பருவ இறுதித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அந்தத் தேர்வுகளை மறுஅட்டவணைப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபுகைமூட்டம்பள்ளி