ஆர்னல்டின் கைக்கடிகாரம் 430,000 வெள்ளிக்கு ஏலம்

1 mins read
b6a342f8-509e-4f06-ad78-3e2e1c397b8a
தமது கைக்கடிகாரம் பெருந்தொகைக்கு ஏலம் போனதால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார் ஆர்னல்ட் ஷ்வார்சனெகர். - படம்: ஏஎஃப்பி

வியன்னா: ஹாலிவுட் நட்சத்திரம் ஆர்னல்ட் ஷ்வார்சனெகரின் கைக்கடிகாரம் ஏறக்குறைய 430,000 வெள்ளிக்கு ஏலம் போனது.

கடந்த புதன்கிழமை (ஜனவரி 17) ஜெர்மனி சென்றபோது, அந்த விலைமதிப்புமிக்க ‘அவ்டெமர்ஸ் பிகெட்’ கைக்கடிகாரம் குறித்து சுங்கத்துறையிடம் 76 வயது ஆர்னல்ட் தெரிவிக்கவில்லை.

அதனையடுத்து, மியூனிக் விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் அவர் தடுத்துவைக்கப்பட்டார்.

பருவநிலை சார்ந்த தமது அறநிறுவனத்திற்காக மறுநாள் வியாழக்கிழமை அவர் அந்தக் கைக்கடிகாரத்தை ஏலம் விடவிருந்தார்.

ஏலத்தின் தொடக்கத் தொகை 50,000 யூரோவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரியாவில் நடந்த ஏலத்தில் அந்தக் கைக்கடிகாரம் 293,000 யூரோவிற்கு (S$430,000) ஏலம் போனது.

இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த ஆர்னல்ட், தாம் மியூனிக் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

“சுங்கத்துறை அதிகாரிகள் என்னிடம் இரண்டாவது கைக்கடிகாரம் எதுவும் உள்ளதா எனத் தேடினர். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. ஏனெனில், சூரிய ஒளிகூட புக முடியாத இடத்தில் அதனை நான் ஒளித்து வைத்திருந்தேன்,” என்று ஆர்னல்ட் வேடிக்கையாகக் கூறியுள்ளார்.

‘அவ்டெமர்ஸ் பிகெட்’ கைக்கடிகாரம் குறித்து தெரிவிக்காததற்காக 4,000 யூரோ வரி, 5,000 யூரோ தண்டம் உட்பட 35,000 யூரோ ஆர்னல்டிடம் வசூலிக்கப்பட்டதாக ஜெர்மானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கைக்கடிகாரம் ஆர்னல்டுக்கென வடிவமைத்து, உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்