முழுமையான செயற்கை உயிரணுவை உருவாக்கிய விஞ்ஞானிகள்

முழுமையான செயற்கை உயிரணுவை உருவாக்கிய விஞ்ஞானிகள்

2 mins read
ab7c7d16-9bef-4680-9fac-f363649eb575
மினசோட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஸ்பெட்செல் என்ற செயற்கை உயிரணுவை உருவாக்கியுள்ளனர். - படம்: அடாமலா லேப்

மினசோட்டா பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் ‘ஸ்பட்செல்’ என்ற ஒரு செயற்கை உயிரணுவை உருவாக்கியுள்ளனர். ஆய்வகத்தில் உள்ள உயிரற்ற வேதிப்பொருள்களைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஓர் உயிருள்ள உயிரணு செய்யும் பெரும்பாலான வேலைகளை இது செய்கிறது. இது, உணவை உட்கொள்கிறது, வளர்கிறது, இனப்பெருக்கம் செய்து, தனது மரபணுப் பொருள்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது.

முன்னதாகப் பல செயற்கை அணுக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஆய்வக வேதிப்பொருள்களைக் கொண்டு கீழ்மட்டத்திலிருந்து மேல் வரையிலான பிறப்பு முதல் அடுத்த தலைமுறை அணுக்களாகப் பிரிவது வரையில் முழுமையான வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்த முதல் செயற்கை உயிரணு இந்த ‘ஸ்பட்செல்’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது, ஓர் உயிருள்ள அணுவின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும். உயிரின் செயல்பாடுகளுக்குத் தேவையான அடிப்படை மரபணு, கட்டமைப்பு கூறுகளை இது வெளிப்படுத்துகிறது.

இதற்கு உயிர் இருக்கிறதா என்றால் இல்லை அல்லது இருக்கலாம் என்பதுதான் அறிவியல் அறிஞர்களிடமிருந்து வரும் பதிலாக உள்ளது.

‘ஸ்பட்செல்’லை உருவாக்கிய ஆய்வாளர்கள் தாங்கள் ‘உயிரை’ உருவாக்கிவிட்டதாகக் கூறவில்லை. அதே வேளையில் இந்த உயிரணு போன்ற அமைப்பு உயிருள்ள அணுக்களைப் போலவே செயல்படுகிறது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“உயிருள்ளவற்றையும் உயிரற்றவற்றையும் வேறுபடுத்திக் காட்டப் பயன்படும் பண்புகளான உணவைச் சாப்பிடுதல், வளர்ச்சி, மரபணுப் பெருக்கம், பகுப்பாய்வு, தேர்வுமுறை ஆகிய அனைத்தையும் ஸ்பட்செல் செய்கிறது. இது, எந்தவொரு இயற்கையான அணுவைவிட மிகவும் எளிமையானது. சோதனைச் சாலையில் இது மனிதக் கரங்களால் பாகம் பாகமாகச் சேர்க்கப்பட்டது,” என்று இந்தத் திட்டத்தின் ஆய்வாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான இயற்கை உயிரணுக்களைப் போலல்லாமல், ஸ்பட்செல் சுயமாக வாழும் திறன் கொண்டது அல்ல. புதிய புரதங்களை உருவாக்குவதற்குப் பொறுப்பான ‘ரிபோசோம்களை’ இதனால் சொந்தமாக உருவாக்க முடியாது. எனவே, விஞ்ஞானிகள் இதற்கு முக்கியமான புரதங்களையும் என்சைம்களையும் உணவாக வழங்க வேண்டியுள்ளது. மேலும், இதன் ஒவ்வொரு தலைமுறையும் 5 முதல் 10 தலைமுறைகள் மட்டுமே நீடிக்கின்றன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஸ்பட்செல்லின் மரபணு பெரும்பாலான உயிருள்ள அணுக்களைவிடச் சிறியது. மனிதர்களின் 300 கோடி அடிப்படை ஜோடிகளுடன் ஒப்பிடும்போது, இதில் வெறும் 90,000 அடிப்படை ஜோடிகள் மட்டுமே உள்ளன.

ஸ்பட்செல் ஒரு புதிய கண்டுபிடிப்பாக இருந்தாலும், அறிவியலாளர்கள் “மினிமல் செல்கள்” என்று அழைக்கப்படும் பல ஆண்டுகால ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள ஓர் அணுவின் அத்தியாவசிய செயல்பாடுகள் என்னென்ன, உயிருக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தச் செயற்கை அணுக்கள் அறிவியல் அறிஞர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்