சில நாள்களுக்கு முன்பு, மக்காவ் நகரிலிருந்து சிங்கப்பூர் வரவேண்டிய ஸ்கூட் விமானத்திலிருந்து ஒரு பயணி தகாத நடத்தையால் வெளியேற்றப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) ஸ்கூட் விமானம் மக்காவ் நகரை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு சம்பவம் நடந்துள்ளது என்பதையும் அந்தப் பெண் பயணி, அந்நகரின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பதையும் ஸ்கூட் விமானம் வியாழக்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்தது.
அதுகுறித்து சீன சமூக ஊடகமான ‘ஷியாவ்ஹொங்ஷு’ ஒரு காணொளியை திங்கட்கிழமை வெளியிட்டது. அதில் மக்காவ் காவல்துறை என நம்பப்படும் சீருடை அணிந்த அதிகாரிகளும் ஸ்கூட் விமான சிப்பந்திகளும் அந்த மாதை விமானத்தில் இருந்து வெளியேற்றுவதைக் காணமுடிந்தது.
அந்தநேரத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் பலர் கைதட்டி பாராட்டுவதும் பதிவாகியுள்ளது.
அந்தக் காணொளியைப் பதிவிட்டவர் அச்சம்பவத்தால் விமானம் இரண்டு மணிநேரம் புறப்படாமல் நின்றுவிட்டது என்று தெரிவித்தார். அவரது பதிவுக்கு 980 பார்வையாளர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் 80 பேர் பதில் கருத்துரைத்துள்ளனர்.
ஊடகக் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்கூட் நிறுவனம், டிஆர்905 என்ற எண்ணைக் கொண்ட விமானத்தில் 173 பயணிகள் இருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது என்பதை மட்டும் குறிப்பிட்டது. அந்த மாது எத்தகைய தகாத செயலைப் புரிந்தார் என்பதை அது விளக்கவில்லை.
சிங்கப்பூருக்கு உள்ளூர் நேரப்படி 6.45 மணிக்கு மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த விமானம் அந்த மாதின் நடத்தையால் தாமதமாகி, 8.46 மணிக்குத்தான் அங்கிருந்து புறப்பட்டதாக அறியப்படுகிறது.
அந்தப் பயணியை வெளியேற்றுவதற்கு முன், உள்ளூர் அதிகாரிகள் வருவதற்கும், அப்பயணியின் பயணப்பையை அப்புறப்படுத்துவதற்கும் அதிக நேரம் தேவைப்பட்டதால் விமானம் புறப்பட கால தாமதம் ஆனது என்று ஸ்கூட் விளக்கியது.
அதுவரை மற்ற விமானப் பயணிகள் அனைவருக்கும் குடிநீரும் பானங்களும் வழங்கப்பட்டதையும் ஸ்கூட் குறிப்பிட்டது.
விசாரணை தொடர்வதால் மேல் விவரங்களை வழங்கமுடியவில்லை என்று கூறிய ஸ்கூட் சேவைத் தடையால் பாதிப்படைந்தோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருத்தம் தெரிவித்தது.
“பயணிகளின் பாதுகாப்பும் விமானச் சிப்பந்திகளின் நலனும் நிறுவனத்தின் முன்னுரிமை. அவர்களுக்கு எதிராக எந்தவொரு பயணி நடந்துகொண்டாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்பதை ஸ்கூட் உறுதிப்படுத்தியது.
