மும்முனைப் போட்டி இருப்பினும் பாசிர் ரிஸ்-சாங்கியில் போட்டியிடுவோம்: எஸ்டிஏ

1 mins read
1bbb67ba-0f6e-45a6-aa6f-e867fdc5526a
புலாவ் உபின் தீவில் செய்தியாளர்களிடம் பேசும் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணித் தலைவர் டெஸ்மண்ட் லிம். - படம்: லியன் ஹ சாவ்பாவ்

பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் மும்முனைப் போட்டி இருந்தாலும் அங்கு சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி களம் காணும் என்று உறுதிபடக் கூறியுள்ளார் அதன் தலைவர் டெஸ்மண்ட் லிம்.

புலாவ் உபின் தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20ஆம் தேதி) தொகுதி உலா மேற்கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவரது சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி அப்போதைய பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, மக்கள் குரல் கட்சி ஆகியவற்றுடன் மும்முனைப் போட்டியில் இறங்கியது இங்கு நினைவுகூரத்தக்கது.

தற்போதைய பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியானது, பாசிர் ரிஸ் குடியிருப்புப் பகுதியின் பெரும்பகுதியும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் சாங்கி பிரிவும் இணைந்த பகுதியாகும். இந்த பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் புலாவ் உபின் தீவும் உள்ளடக்கப்பட்டுள்ளது

இதுபற்றிக் கூறும் டெஸ்மண்ட் லிம், “எங்கள் குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதில் ஒவ்வொரு தேர்தலிலும் எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முன்னர் பாசிர் ரிஸ்-பொங்கோலில் களம் கண்டோம், அதேபோல் தற்பொழுது பாசிர் ரிஸ்-சாங்கி தொகுதியில் நிற்கிறோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணிபாசிர் ரிஸ் - சாங்கிபோட்டி