புத்ராஜெயா: மலேசியாவும் தாய்லாந்தும் மீன்வளச் சந்தை அணுகல் தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, வேளாண் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு வாரத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டுள்ளன.
தாய்லாந்து பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல்லின் மலேசியாவிற்கான முதல் அதிகாரபூர்வ பயணத்தை முன்னிட்டு, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 9) கையெழுத்தானது.
விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு, தாய்லாந்து வேளாண்மை, கூட்டுறவுத் துறை அமைச்சர் சூரியா ஜுவாங்ரூங்ருவாங்கிட் ஆகியோருக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, பரிமாறப்பட்டதைப் பிரதமர்கள் அன்வார் இப்ராகிம், அனுட்டின் சார்ன்விராக்குல்லும் பார்வையிட்டனர்.
கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு அன்வார், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
ஒப்பந்தம் விரைவில் அமல்
“இரு அமைச்சர்களின் உறுதிப்பாட்டுடன், மீன்வளம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்த இந்த விவகாரத்தை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். தாய்லாந்து இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றரை மாதங்களில் அமலுக்கு வர வேண்டும் என்று விரும்பியது. ஆனால் அது ஒரு வாரத்தில் அமலுக்கு வர வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
கலந்துரையாடலில் உணவுப் பாதுகாப்பு முக்கிய நோக்கமாக இருந்தது என்று கூறிய அனுட்டினும் இந்த முயற்சியை வரவேற்றார்.
“உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, மீன்வளம் மற்றும் விவசாயப் பொருள்களுக்கான சந்தை அணுகல் தொடர்பான நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வுகளைக் காண்பதற்காக, சற்று முன்பு முடிவுக்கு வந்த எங்கள் வேளாண் அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பை வரவேற்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, பயிர் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, மீன்வளம், வர்த்தகத்தை எளிதாக்குதல் மற்றும் விவசாயப் பொருள்களைச் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒரு விரிவான கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்குகிறது என்று மலேசிய வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த ஒப்பந்தம் ஆய்வு மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு, உயிரியல் பாதுகாப்பு, சுகாதாரம், தாவரச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிற துறைகளையும் உள்ளடக்கியுள்ளது.

