கோலாலம்பூர்: மாயமான எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.
“அந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதியில் மீண்டும் அப்பணி தொடங்கப்படும்,” என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 3) ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
கடந்த 2014 மார்ச் 8ஆம் நாள் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்ட அந்த போயிங் 777 விமானம் மாயமானது.
விமானத்துறை வரலாற்றிலேயே பெருமுயற்சி எடுத்து தேடப்பட்டபோதும் அவ்விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அதனைத் தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், அமைச்சர் லோக்கின் அண்மைய கருத்து வெளியாகியுள்ளது.
இதற்குமுன்னரும் இந்தியப் பெருங்கடலின் பரந்த பரப்பளவில் அது தேடப்பட்டபோது அம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

