கோலாலம்பூர்: பிறருடைய தனிப்பட்ட விவரங்களை அவர்களது அனுமதியின்றி இணையத்தில் தேடுவது அல்லது பகிர்வது சட்டவிரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மலேசியக் காவல்துறையின் தலைவர் முகம்மது காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அண்மையில் செய்தியாளர் ரெக்ஸ் டான் பொதுத் தளத்தில் பதிவிட்ட கருத்துகளுக்கு எதிராக அதிருப்திக் குரல்கள் எழுந்ததை அடுத்து, அவரது தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் வலம் வந்தன.
சமூக ஊடகத்தில் தனிநபர் விவரங்கள் வலம் வருவது குறித்து மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் முன்வைத்த கருத்துகளை மலேசியக் காவல்துறை கருத்தில் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் தேடுபவர்கள், பகிர்ந்துகொள்பவர்களிடம் பல்வேறு சட்டங்களின்கீழ் விசாரணை நடத்தலாம் என்று திரு முகம்மது காலித் கூறினார்.
தனிநபர் தரவு பாதுகாப்புக் கொள்கைகள் அனைவருக்கும் பொருந்தும் என்றார் அவர்.
பழி வாங்கவும் மிரட்டல் விடுக்கவும் தொல்லை விளைவிக்கவும் தனிநபர் விவரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று திரு முகம்மது காலித் தெரிவித்தார்.
மின்னிலக்கத் தளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

