ஷேக் ஹசினாவிற்கு எதிராக இரண்டாவது கைதாணை

ஷேக் ஹசினாவிற்கு எதிராக இரண்டாவது கைதாணை

படம்: புளூம்பெர்க்

06 Jan 2025 - 5:56 pm

1 mins read

டாக்கா: நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு எதிராக பங்ளாதேஷ் நீதிமன்றம் திங்கட்கிழமையன்று (ஜனவரி 6) இரண்டாவது கைதாணை பிறப்பித்துள்ளது.

இம்முறை, பலர் மாயமான விவகாரத்தில் ஹசினாவிற்கும் பங்குள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹசினாவின் 15 ஆண்டுகால ஆட்சியின்போது பேரளவில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

பங்ளாதேஷ் பாதுகாப்புத் துறையினரால் 500க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டதாகவும் அவர்களில் சிலர் பல ஆண்டுகளாக ரகசியச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஹசினாவின் அரசியல் எதிரிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் தொடர்பில் ஹசினாவிற்கு எதிராக இரண்டாவது கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் அனைத்துலகக் குற்றத் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

ஆட்சிப் பொறுப்பிலிருந்து ஹசினா அகற்றப்பட்டதை அடுத்து, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து வெளிப்படையாகப் பகிரத் தொடங்கியுள்ளனர்.

மாணவர்கள் முன்னெடுத்த புரட்சியால் ஆட்சியை இழந்த 77 வயது ஹசினா கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்குத் தப்பியோடினார். மனிதநேயத்திற்கு எதிராகக் குற்றமிழைத்ததாகக் கூறி அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டதன் அடிப்படையில் அவரைக் கைதுசெய்ய ஏற்கெனவே ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்