கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு காலத்திற்கு முன்னதாக, மலேசியாவில் கனரக வாகனங்கள் மீதான சிறப்பு அமலாக்க நடவடிக்கைகளை அந்நாட்டுச் சாலைப் போக்குவரத்துத் துறை மேற்கொள்ளும் என அத்துறையின் தலைவர் ஹமீது அதாம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) தெரிவித்தார்.
குறிப்பாக, 300 கி.மீ.க்கு மேல் பயணம் மேற்கொள்ளும் விரைவுப் பேருந்துகளில் இரண்டாவது ஓட்டுநர் இருப்பதை அத்துறை அதிகாரிகள் உறுதிசெய்வர் என்றார் அவர்.
ஓட்டுநர் உரிமம், வாகனம் ஓட்டுவதற்கான நேர வரம்பு, வாகனங்களின் நிலை ஆகியவற்றிலும் அதிகாரிகள் கவனம் செலுத்துவர் என அவர் கூறினார்.
மேலும், 300 கிலோ மீட்டருக்கு மேல் அல்லது 4 மணி நேரம் பயணம் செய்யக்கூடிய பேருந்துகளில் இரண்டாவது ஓட்டுநர் இருப்பது கட்டாயம் எனும் விதிமுறை பின்பற்றப்படுவது குறித்து கண்காணிக்கப்படும் என்றும் திரு அதாம் குறிப்பிட்டார்.
விடுமுறை காலத்தில் பயணிக்கும் சாலை பயனர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காகப் பயணிகளின் பாதுகாப்புத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் போக்குவரத்து நெரிசலின்றி சீராகச் செல்வதை உறுதி உறுதி செய்வதையும் இந்த சிறப்பு நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

