யங்கூன்: போரும் பூசலும் சூழ்ந்துள்ள மியன்மாரின் பொதுத்தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்களிப்புக்கு மக்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) வாக்குச் சாவடிகளுக்குச் சென்றனர்.
ராணுவ ஆட்சியை மேலும் வேரூன்றச் செய்யும் கருவியாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில் முதல் கட்ட வாக்களிப்பில் அதிகம் பேர் வாக்களிக்கவில்லை. இத்தேர்தல் சுதந்திரமாகவோ, நேர்மையாகவோ இல்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பும் பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் குறைகூறி வருகின்றன.
2021ல் அந்நாட்டில் நடந்த ஆட்சிக் கவிழப்புக்குப் பிறகு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. 51 மில்லியன் பேர் வாழும் அந்நாடு உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நிலையில் பொருளியல் நிலைத்தன்மையை மீட்டெடுக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.
இறுதிக்கட்ட வாக்கெடுப்பு, ஜனவரி 25ல் நடைபெறவுள்ளது. மொத்தத்தில் மியன்மாரின் 330 நகரங்களில் 265ல் வாக்களிப்பு நடைபெறும். ராணுவம் ஆதரித்த யுஎஸ்டிபி கட்சி, 102 கீழவை இடங்களில் 90 இடங்களை, டிசம்பர் 28 நடைபெற்ற முதல் கட்ட வாக்கெடுப்பில் கைப்பற்றியது.
பெரும் பூசலுக்கிடையே நிலையான ஆட்சியை ராணுவ அரசாங்கம் அமைக்கும் முயற்சி அபாயகரமானதாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். அனைத்துலகச் சமூகத்தில் அத்தகைய அரசாங்கத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்றும் கூறப்பட்டது.
தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக ராணுவ அரசாங்கத்தின் தலைவர் மின் ஆங் ஹ்லய்ங், கடந்த டிசம்பரில் கூறினார். வாக்களிக்கப் பேரளவில் திரண்ட மக்கள் ஜனநாயகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

