கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பரபரப்பான சாலையாகத் திகழும் ஜாலான் பின்னாங் சாலையில் மே 13ஆம் தேதி மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.
மரம் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்ததால் அது தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் சாலையில் நின்றுகொண்டிருந்த சில கார்களும் சேதமடைந்தன.
இச்சம்பவத்தில் யாரேனும் காயமடைந்தனரா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
இதனால் அவ்வட்டாரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கோலாலம்பூர் சாலைகளில் மரம் விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் மே 7ஆம் தேதி ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையின் குறுக்கே மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதில் ஒருவர் மாண்டார், இருவர் காயமடைந்தனர்.
“கோலாலம்பூரின் நகர்ப்பகுதியில் உள்ள 175 மரங்கள் விழக்கூடிய அபாயத்தில் இருந்தன, அதில் 147 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. மீதமுள்ள மரங்கள் விரைவில் வெட்டப்படும்,” என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.