ஈராக்கில் ரகசியப் படை; ஈரான்மீது குற்றச்சாட்டு

ஈராக்கில் ரகசியப் படை; ஈரான்மீது குற்றச்சாட்டு

2 mins read
474731f6-affc-411f-abab-a0cf66376bf9
ஈராக்கின் தெற்கு நகரங்களான பஸ்ரா, சமாவாவில் இருந்து குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பாக்தாத்: ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவற்படை ஈராக் நாட்டில் சில ரகசியப் படைகளை அமைத்து அமெரிக்காவின் நட்பு நாடுகள்மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ரகசியப் படையைக் கொண்டு தாக்குதல் நடத்துவதன்மூலம் அமெரிக்காவின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கமுடிவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலை ஈராக்கில் உள்ள எட்டுப் பேர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

மூன்று அல்லது நான்கு ரகசியப் படைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 10 போராளிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் குறைந்தது ஏழுமுறை பாலைவனத்திலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக நம்பப்படுகிறது.

ஈராக்கின் தெற்கு நகரங்களான பஸ்ரா, சமாவாவில் இருந்து குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஈராக்கில் உள்ள போராளிக் குழுக்கள்மூலம் ரகசியப் படைக்கு ஆள்கள் திரட்டப்பட்டதாகவும் அவர்கள் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவற்படைக்கு நேரடியாக வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது.

புதிய ரகசியப் படைகள் அமைப்பது தந்திரமான செயல் என்றும் ஈராக்கில் உள்ள போராளிகள் பலர் ஈரானுடன் தொடர்புடையவர்கள் என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் முடிவான அமைதி ஒப்பந்தத்தில் ஈராக்கில் உள்ள ரகசியப் படை குறித்து விவாதிக்கப்படவில்லை.

போரை முடிவுக்குக் கொண்டுவருவது, ஈரான் அணுசக்தியின் எதிர்காலம் போன்றவை குறித்தே ஒப்பந்தத்தில் அதிகம் பேசப்பட்டது.

ரகசியப் படை குறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சிடம் ராய்ட்டர்ஸ் கேள்வி எழுப்பியது. ஆனால் அதற்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

ஈராக்கில் உள்ள ரகசியப் படைகளை ஈரான் உடனடியாகக் கலைக்கவேண்டும் என்றும் அமெரிக்கா குரல் எழுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்ஈராக்அமெரிக்கா