மலேசியப் பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடு போதவில்லை: பிரதமர் அன்வார்

மலேசியப் பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடு போதவில்லை: பிரதமர் அன்வார்

படம்: ராய்ட்டர்ஸ்

06 Oct 2026 - 4:41 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியப் பள்ளிகளில் மாணவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் போதவில்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நடந்த கேள்வி பதில் நேரத்தில் பிரதமர் அன்வார் பேசினார். ஜோகூரில் அண்மையில் உயர்நிலை நான்கில் பயிலும் மாணவி அவரது பள்ளியில் மரணமுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் 5,681 மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாக புகார்கள் செய்யப்பட்டதாகவும் பிரதமர் சுட்டினார். உண்மை எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

தங்குமிடங்களைக் கண்காணித்தல், பாதுகாப்புக்கான தணிக்கைகள், ஆலோசனை வழங்குதல், மனநல ஆதரவு ஏற்பாடுகள் என கல்வி அமைச்சு பல செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியபோதும் அது போதவில்லை என்று அவர் கவலை தெரிவித்தார்.

“அவை போதுமா? இல்லை போதவில்லை,” என்று அவர் நாடாளுமன்றத்தில் ஆதங்கப்பட்டார்.

ஆக அண்மைய சம்பவத்தில் மரணமடைந்த 16 வயது சோஃபியா முகம்மது கைரூல் ஃபைசால் என்ற மாணவியின் பெயரைப் பிரதமர் குறிப்பிட்டார். அந்த மாணவரோடு சாபா மாநிலத்தில் 2025ல் மரணமடைந்த சாரா கரினா மகாதீர் என்ற மாணவியையும் கிளந்தான், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் மரணமடைந்த மற்ற மாணவர்கள் குறித்த வழக்குகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.

அவர்களில் சில மாணவர்கள் மரணமடைந்த நிலையில் ஒருசிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதோடு, மேலும் சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றனர் என்று அவர் கூறினார்.

ஜோகூரின் யொங் பெங் பள்ளியில் மரணமடைந்த ஐரீன் சோஃபியாவின் வழக்கில், அங்கு கண்காணிப்பு கேமரா கருவிகள் இருந்தும் சம்பவ இடத்தில் அவை பொருத்தப்படவில்லை.

மிகவும் உறுதியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையைப் பாராட்டிய பிரதமர், கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் கடமை தலைமைச் சட்ட அலுவலகத்திடம் உள்னதாகவும் கூறினார்.

பெற்றோரிடம் முக்கிய பங்கு உள்ளது என்று நினைவூட்டியதோடு, பிள்ளைகள் வீடு திரும்பவில்லை என்பதைக்கூட தெரிந்துகொள்ளாமல் அவர்களில் சிலர் எப்படி இருந்தார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

“பெற்றோர்மீது பழி சுமத்தவில்லை. ஆனால் குடும்ப ஒற்றுமை ஒரு அடித்தளத்தைப் போன்றது. வலுவான குடும்பங்களைக் கொண்டுதான் ஒரு நாடு நிமிர்ந்து நிற்கமுடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்