தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் 10 நாள்களில் தயாராகும்: ஸெலென்ஸ்கி

2 mins read
dfef760c-d14c-42bb-9470-0d50c3b1c6a7
திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 18) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி. - படம்: இபிஏ

கியவ்: உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அடுத்த பத்து நாள்களுக்குள் தயாராகிவிடும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஐரோப்பியத் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்புக்குப் பிறகு இத்தகவலை அவர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்டார்.

“பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து உக்ரேனின் பங்காளிகள் அறிவிக்கக்கூடும். கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும். அடுத்த ஒரு வாரத்திலிருந்து பத்து நாள்களுக்குள் அவை ஆவணப்படுத்தப்படும்,” என்றார் திரு ஸெலென்ஸ்கி.

ரஷ்யாவுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் என்று திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 18) அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

ஆனால், எத்தகைய உதவி வழங்கப்படும் என்பது குறித்து அவர் கூறவில்லை.

“உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதி செய்ய உதவும் நாடுகளில் அமெரிக்காவும் அடங்கும் என்பதை அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது மிகவும் முக்கியம். போரை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இது மிகவும் பெரிய முன்னேற்றம்,” என்று அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகும் அமைதி உடன்படிக்கை கூடிய விரைவில் எட்டப்படுவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை என்றார் திரு ஸெலென்ஸ்கி. இருப்பினும், அதிபர் டிரம்ப்புடனான கலந்துரையாடல்களில் இதுவே ஆகச் சிறந்தது என்று திங்கட்கிழமையன்று திரு ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான சந்திப்புக்குத் தயார் என்றார் அவர். நிலப்பரப்பு சார்ந்த விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் இருதரப்பு நிலை அடிப்படையில் நடைபெறும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார்.

இருப்பினும், இதற்குரிய தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

“நிலப்பகுதிகள் தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை எனக்கும் புட்டினுக்கும் மட்டுமே உள்ளது,” என்றார் திரு ஸெலென்ஸ்கி.

உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களில் அமெரிக்க ஆயுதங்களும் அடங்கும் என்றார் அவர். அவற்றில் போர் விமானங்கள், வான் தற்காப்பு முறை ஆகியவை அடங்கும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார்.

90 பில்லியன் அமெரிக்க டாலர் (S$115.61 பில்லியன்) பெறுமானமுள்ள பரிந்துரைத் தொகுப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“பொருள்களை ஏற்றுமதி செய்வதை உக்ரேன் மீண்டும் தொடங்கியதும் உக்ரேனிடமிருந்து ஆளில்லா வானூர்திகளை அமெரிக்கா வாங்கும். இதுகுறித்து அமெரிக்க அதிபர் இணக்கம் தெரிவித்துவிட்டார். இது உக்ரேனுக்கு மிகவும் முக்கியம்,” என்றார் அதிபர் ஸெலென்ஸ்கி.

குறிப்புச் சொற்கள்