ஜெருசலம்: இஸ்ரேலியின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளைதுபாய் விமானத்தை நடுவானில் கடத்த முயன்ற இணை விமானியின் கொடூரத் தாக்குதலைப் பயணிகள், விமானப் பணியாளர்களும் முறியடித்தனர்.
விமானம் விபத்துக்குள்ளாகாமல் தடுக்கப்பட்ட போதிலும், பேரழிவுக்கு வழிவகுத்திருக்கக்கூடிய பாதுகாப்புக் குறைபாட்டின்மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
மேலும், வெளிநாட்டு விமான நிறுவனங்களைக் கண்காணிப்பது தொடர்பான இஸ்ரேலின் விதிமுறைகள் சிக்கலாகவும் குழப்பமாகவும் இருப்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
174 பயணிகளுடன் (அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலியர்கள்) துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பறந்த விமானத்தை இயக்கும் பொறுப்பு, தீவிர இஸ்லாமியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் ஓமான் நாட்டைச் சேர்ந்த இணை விமானியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டிற்கு யார் காரணம் என இஸ்ரேலிய அரசு அமைப்புகள் அக்டோபர் 4ஆம் தேதி ஒன்றின் மீது ஒன்று குற்றம் சுமத்திக்கொண்டன.
செப்டம்பர் 30ஆம் தேதி நடந்த அந்தப் பயணத்தின்போது, அந்த இணை விமானி இந்திய வம்சாவளித் தலைமை விமானியைத் தாக்கி, விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றார்.
காயமடைந்த தலைமை விமானியின் உதவியுடன் பயணிகளும் விமானப் பணியாளர்களும் இணைந்து செயல்பட்டு அவரைத் தடுத்ததாகச் சாட்சிகளும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
2023ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இஸ்ரேலியச் சட்டத்தின்படி, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்களது பயணிகள், விமானப் பணியாளர்களின் பட்டியலைப் பயணத்திற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன்பாக அந்நாட்டின் நிதி அமைச்சின் வருவாய் ஆணையத்திற்குள் இருக்கும் சிறப்புப் பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகள் இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சு, அந்நாட்டின் அனைத்துலக உளவு அமைப்பான ‘மோசாட்’, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு, பிற அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் அனைத்துலகப் பொது விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பொறுப்புகள் சிதறடிக்கப்பட்டு, குழப்பமாக உள்ளதாக அந்நாட்டு அரசாங்கக் கண்காணிப்பு அமைப்பு 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
