கூலிம்: அண்மையில் மலேசிய ஆகாயப்படைத் தளம் ஒன்றில் 96.6 கிலோகிராம் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்புப் படைத் தளங்களில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது குறித்து உள்துறை அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
ராணுவம், காவல்துறை வளாகங்கள் உள்ளிட்ட தளங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவுள்ளன.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இவ்விவகாரத்தை எழுப்பியுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது விவாதத்திற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தற்போது நாட்டின் அதிகாரபூர்வ நுழைவாயில்களில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று அவர் கூறினார். இவ்விவகாரத்தை மறுஆய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சைப் பிரதமர் கேட்டுக்கொண்டதாக அவர் விளக்கினார்.
லூனாஸ், கம்போங் பாயா புசாரில் தீபாவளிக் கொண்டாட்டத்தையொட்டி சனிக்கிழமை (நவம்பர் 21) இரவு நடைபெற்ற நற்பண்புகளை விதைக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு திரு சைஃபுதீன் செய்தியாளர்களிடம் பேசினார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறிய அவர், இது குற்றக் கும்பலுடன் தொடர்புடையதா என்பதைத் தம்மால் உறுதிப்படுத்த முடியாது என்றும் காவல்துறை இதனை விசாரிக்கட்டும் என்றும் சொன்னார்.
இதனிடையே, நாட்டிற்குள் நுழையும், வெளியேறும் இடங்களில், குறிப்பாக, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்துறை அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளன.
கடத்தல்கள் அதிகம் இடம்பெறுவதாகக் கருதப்படும் இடங்களில் 100 விழுக்காடு சோதனை நடத்துவதும் பயணிகளையும் பயணப் பெட்டிகளையும் 100 விழுக்காடு சோதனை செய்வதும் அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும். இது கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல்களை நிச்சயம் பாதிக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
