பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணி வெற்றிபெற்றால் ஆகஸ்ட் 14 சிலாங்கூரில் பொது விடுமுறை

1 mins read
c3ff881f-e13c-468d-bb98-646618396d07
சிலாங்கூர் இடைக்கால முதல்வர் அமிருதின் ‌ஷாரி. - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணி கூட்டணி வெற்றிபெற்றால், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) சிலாங்கூர் மக்களுக்குப் பொது விடுமுறை கிடைக்கும்.

சிலாங்கூர் மாநில இடைக்கால முதல்வர் அமிருதின் ‌ஷாரி, வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் இதனை அறிவித்தார்.

தேர்தலில் வாக்களித்து தங்களது கடமையை நிறைவேற்றும்படியும் பக்கத்தான்-ஹரப்பான் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும்படியும் வாக்காளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

“கலகத்தைத் தூண்டி, நிலையின்மையை உண்டாக்க முனையும் கட்சிக்குப் பதிலாக மாநில நிர்வாகத்தில் ஏற்கெனவே சாதித்துக் காட்டியிருக்கும் கூட்டணியைத் தேர்ந்தெடுங்கள்,” என்றார் அவர்.

தமது அரசாங்கம் பதவி ஏற்றவுடன் நூறு நாள்களுக்குள் நிறைவேற்றப்போகும் ஐந்து வாக்குறுதிகளையும் அவர் வெளியிட்டார்.

குழந்தைப் பராமரிப்புச் செலவுகளுக்காகப் பெண்களுக்கு 1,000 ரிங்கிட் உதவித்தொகை, குறைந்த விலையிலான வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் மதிப்பீட்டு வரித் தள்ளுபடி, உயர்கல்வி மாணவர்களுக்கு 200 முதல் 1,000 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள், சிலாங்கூரில் 500 விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் 1,000 ரிங்கிட் ஊக்கத்தொகை, இமாம்களுக்கும் பிலால்களுக்கும் கூடுதல் செலவுத்தொகை ஆகியனவே அவை.

சிலாங்கூர் மாநிலத்தின் சுங்கை துவா தொகுதியில் அமிருதின் போட்டியிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்