ஷா ஆலம்: முறையான திட்டமிடல் மற்றும் மிகவும் பயனுள்ள, உடனடி நடவடிக்கைகள் மூலம் வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதின் இத்ரிஸ் ஷா மாநில அரசை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நீண்டகாலப் பிரச்சினையான இதற்கு நீடித்த தீர்வுகளைக் கண்டறிய, அனைத்துலக நிபுணர்களிடமிருந்து, குறிப்பாக நெதர்லாந்து நாட்டின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துமாறு மாநில அரசுக்குத் தான் பலமுறை அறிவுறுத்தியதாக சுல்தான் கூறினார்.
“வெள்ளப் பிரச்சினையை நான் பலமுறை எழுப்பியுள்ளேன். துரதிர்ஷ்டவசமாக, எனது அறிவுரை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது சர்க்கரைவள்ளிக் கிழங்கு இலையில் தண்ணீர் ஊற்றுவது போன்றது (அதாவது வீணான அறிவுரை).
“ஒவ்வோர் ஆண்டும் வெள்ளப் பாதிப்புகளைச் சமாளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், பயனுள்ள பலன்கள் எதுவும் தென்படவில்லை. பல பகுதிகளில், குறிப்பாகக் குடியிருப்புப் பகுதிகளில், வெள்ளம் தொடர்ந்து ஏற்பட்டு, மாநில மக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
15வது சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் நான்காவது அமர்வின் தொடக்க விழாவில் ஆற்றிய தனது அரச உரையில் சுல்தான் ஷரஃபுதின் இவ்வாறு கூறினார்.
மேலும், அதிகரித்து வரும் மக்கள்தொகைக்குத் தூய்மையான நீர் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக, கிள்ளான் ஆற்றைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சுல்தான் கேட்டுக்கொண்டார்.
“வெள்ளப் பிரச்சினைகள் மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகப் பிரச்சினைகள் முற்றிலுமாகத் தீர்க்கப்படும் வரை, நடவடிக்கை எடுக்கக் கோருவதில் நான் சோர்வடைய மாட்டேன்,” என்று அவர் வலியுறுத்தினார்.
கழிவு மேலாண்மை, நீடித்த எரிசக்தி சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கியத் துறையாகக் கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் தொழில்துறையை மேம்படுத்துவதில் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுல்தான் பரிந்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
சாலைக் குழிகள் பிரச்சினை
மேலும், சாலையைப் பயன்படுத்துவோரைப் பாதிக்கும் ஒரு தொடர் பிரச்சினையான சாலைக் குழிகளைச் சமாளிக்க, மேலும் முறையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, தற்போதைய பொருளியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைந்து, மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சுல்தான் ஷரஃபுதின் அறிவுறுத்தினார்.
“அண்மைகாலமாக, நான் அதிகப்படியான அரசியல் சூழ்ச்சிகளைக் காண்கிறேன். இது மக்களைக் குழப்பி, பிளவுகளுக்கு வழிவகுக்கும்.
“சிலாங்கூர் தொடர்ந்து முன்னேற்றமடையவும் செழித்தோங்கவும், நாம் நமது பொறுப்புகளை நம்பிக்கை, நேர்மை மற்றும் உண்மையான ஈடுபாட்டுடன் நிறைவேற்றுவோம்,” என்று சுல்தான் கூறினார்.

