உரிமமற்ற ஐந்து கோழி இறைச்சிக் கூடங்களை மூட சிலாங்கூர் நடவடிக்கை

உரிமமற்ற ஐந்து கோழி இறைச்சிக் கூடங்களை மூட சிலாங்கூர் நடவடிக்கை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Nov 2026 - 12:30 pm

1 mins read

ஷா ஆலம்: சிலாங்கூரில் அங்கீகாரமற்ற ஊழியர்களைப் பணியமர்த்திய ஐந்து கோழி இறைச்சிக் கூடங்களை மூட அம்மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த ஐந்து இறைச்சிக் கூடங்களும் உரிமமின்றி செயல்படுவதாகக் கூறப்பட்டது.

சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையுடன் இணைந்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் அவற்றை விரைவில் மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அம்மாநில இஸ்லாமிய விவகார, புத்தாக்கக் கலாசாரக் குழுத் தலைவர் முகம்மது ஃபஹ்மி இங் கூறினார்.

சம்பந்தப்பட்ட இறைச்சிக் கூடங்களுக்கு ‘சீல்’ வைப்பதுடன் அங்கிருக்கும் கருவிகளும் பறிமுதல் செய்யப்படும் என்றார் அவர்.

சுபாங் ஜெயா, கோல லங்காட் பகுதிகளில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட இதுபோன்ற நடவடிக்கை பலனளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த அக்டோபரில் பூச்சோங் பகுதியில் உள்ள இறைச்சிக் கூடத்தில் ஹலால் சான்றிதழ் விதிமுறைகளைப் பின்பற்றாமல் பதப்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6.5 டன் கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மலேசியா முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அங்கீகாரமற்ற வெளிநாட்டு ஊழியர்களைச் சம்பந்தப்பட்ட இறைச்சிக்கூடம் பணியமர்த்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அம்மாநிலம் முழுவதும் அமலாக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாசிலாங்கூர்கோழி இறைச்சி