டிரம்ப்புக்கு செனட் ஆதரவு, தீவிரமடையும் ஈரான் போர்

மத்திய கிழக்கெங்கும் போர் விரிவடையும் ஆபத்து

டிரம்ப்புக்கு செனட் ஆதரவு, தீவிரமடையும் ஈரான் போர்

3 mins read
2171deb9-0ef7-44e3-8ae8-ba9fafccbc6e
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்‌ரேல் மக்கள் பாதுகாப்புத் தேடி சுரங்கக் கட்டுமானங்களில் தஞ்சமடைந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்/துபாய்: ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடரும் வேளையில், ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

வியாழக்கிழமை (மார்ச் 5) அதிகாலையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் புகலிடங்களில் தஞ்சமடைந்தனர். இஸ்ரேல் அரசு மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டனில், ஈரான் போர் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பில் செனட் உறுப்பினர்கள் டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால், ஆறாவது நாளை எட்டியுள்ள போர் மத்திய கிழக்கு வட்டாரங்களில் விரிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: இபிஏ

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலை நிறுத்தக் கோரிய தீர்மானத்தை குடியரசுக் கட்சி செனட்டர்கள் தள்ளுபடி செய்தனர். போரைத் தொடர அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு செனட் சபை 53க்கு 47 என்ற வாக்கு அடிப்படையில் ஆதரவளித்துள்ளது.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை அருகே ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்து, குறைந்தது 80 பேர் கொல்லப்பட்ட வேளையில், துருக்கியை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணையை நேட்டோ படைகள் அழித்தன.

ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்வதும், நேட்டோவின் இரண்டாவது பெரிய ராணுவத்தைக் கொண்ட நாடுமான துருக்கி இப்போரில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதும் இதுவே முதல்முறை.

டெஹ்ரானில், இஸ்‌ரேல் - அமெரிக்க ராணுவங்கள் மேற்கொண்டு வரும் தாக்குதலில் பல கட்டடங்கள் சிதைந்துள்ளன.
டெஹ்ரானில், இஸ்‌ரேல் - அமெரிக்க ராணுவங்கள் மேற்கொண்டு வரும் தாக்குதலில் பல கட்டடங்கள் சிதைந்துள்ளன. - படம்: இபிஏ

போரைத் தொடர ஈரான் உறுதி, காமெனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அல் காமெனியின் மகனான மொஜ்தபா காமெனி அடுத்த தலைவராக உருவெடுத்துள்ளதைத் தொடர்ந்து, போர் தீவிரமடைந்துள்ளது. இது ஈரான் பின்வாங்கப் போவதில்லை என்பதைக் காட்டுகிறது.

தாக்குதல் காரணமாக உயிரிழந்த ஆட்சியாளர் காமெனியின் இறுதிச்சடங்குகளை ஒத்திவைப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

புதன்கிழமை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க ஏராளமானோர் அனுமதி கேட்டுள்ளனர். பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகளைத் தயார் செய்த பிறகு, இறுதிச்சடங்கு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் நகரின் பல பகுதிகள் பாழ்பட்டன. ஈரான் ஆதரவு பெற்ற  ஹிஸ்புல்லா படையினரை இஸ்ரேல் தாக்கியது.
பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் நகரின் பல பகுதிகள் பாழ்பட்டன. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினரை இஸ்ரேல் தாக்கியது. - படம்: ஏஎஃப்பி

இதுவரையில், 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் போர் விமானங்கள், டெஹ்ரானில் உள்ள ராணுவத் தளங்கள், ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் மீது 250க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசித் தாக்கியுள்ளன.

ஈரானின் 17 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு, 2,000 இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. விரைவில் ஈரானின் வான்வெளி முழுமையாக அமெரிக்க-இஸ்ரேல் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். போரில் இதுவரையில் 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் ஆட்சியாளர் காமேனி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்களும் போரில் கொல்லப்பட்டனர்.

புதன்கிழமை (மார்ச் 4) லெபனான் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை மேற்கொண்டதில், அங்குள்ள மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றி எரிகிறது.
புதன்கிழமை (மார்ச் 4) லெபனான் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை மேற்கொண்டதில், அங்குள்ள மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றி எரிகிறது. - படம்: ஏஎஃப்பி

போரை 10க்கு 15 என மதிப்பிடும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரானுடனான போரில் அமெரிக்காவின் செயல்பாட்டை 10க்கு 15 என மதிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் பேசிய அவர், ஈரானுடனான மோதலில் அமெரிக்கா மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

போரினால் ஈரானிலும் உலகநாடுகளிலும் விலைவாசிகள் ஏற்றம் கண்டுள்ளன. ஈரானின் டெஹ்ரான் சந்தையில் வியாழக்கிழமை (மார்ச் 5) பொருள் வாங்கும் மாது.
போரினால் ஈரானிலும் உலகநாடுகளிலும் விலைவாசிகள் ஏற்றம் கண்டுள்ளன. ஈரானின் டெஹ்ரான் சந்தையில் வியாழக்கிழமை (மார்ச் 5) பொருள் வாங்கும் மாது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஈரான் மீதான தாக்குதலை மீண்டும் நியாயப்படுத்திய டிரம்ப், “டெஹ்ரான் அணு ஆயுதப் பாதையில் உள்ளது. பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதங்கள் இருந்தால், மோசமான விஷயங்கள் நடக்கும்,” என்றார்.

ஈரானின் தலைவர்கள் வேகமாக கொல்லப்பட்டு வருவதாகவும், அதன் ஏவுகணை ஆயுதங்கள் விரைவாக அழிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இஸ்ரேலுடன் இணைந்து கூட்டு வான்வழித் தாக்குதலைத் தொடரும் என்றார்.

“புதிய போர் எதுவும் தொடங்க மாட்டேன்” என்று அதிபர் தனது முந்தைய பிரச்சாரங்களில் பெருமை பேசியிருந்தாலும், போருக்கான நியாயங்கள் குறித்து பல நாட்களாக முரண்பட்ட செய்திகள் வந்ததால், டிரம்ப் நிர்வாகம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்