செனகல் காற்பந்து பயிற்றுவிப்பாளருக்குத் தடை, அபராதம்

செனகல் காற்பந்து பயிற்றுவிப்பாளருக்குத் தடை, அபராதம்

2 mins read
78e277aa-05ce-4f04-b585-87728b15de6f
ஆப்பிரிக்க நாடுகளுக்கான காற்பந்துக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மொரோக்கோவை வீழ்த்தி கிண்ணத்தை வென்ற செனகல் குழுவின் பயிற்றுவிப்பாளர் பாப்பே பவுனா டியா (கறுப்புச் சட்டை). - படம்: ராய்ட்டர்ஸ்

ஆப்பிரிக்கக் காற்பந்து சம்மேளனம் செனகல் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளருக்கு ஐந்து ஆட்டங்களில் கலந்துகொள்வதில் தடையும் $100,000 அபராதமும் வியாழக்கிழமை விதித்துள்ளது.

கடந்த ஜனவரி 19ஆம் தேதி நடந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கான காற்பந்துக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மொரோக்கோவுடன் செனகல் மோதியது. அவ்வாட்டம் முடிவடையும் நேரத்தில் மொரோக்கோவுக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை எதிர்த்து, பயிற்றுவிப்பாளர் பாப்பே பவுனா டியா தனது குழுவின் ஆட்டக்காரர்களைத் திடலை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.

விளையாட்டின் போட்டித் தன்மைக்கு ஏற்றதாக அந்தச் செயல் இல்லாததால், ஆப்பிரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் அவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அவர் ஐந்து காற்பந்து ஆட்டங்களில் கலந்துகொள்ள முடியாது. அதோடு அபராதமாக $100,000 அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

காற்பந்து விளையாட்டாளர்களுடன் சேர்ந்து ரசிகர்களும் அமளியில் ஈடுபட்டதால், செனகல் காற்பந்துச் சங்கத்துக்கு $615,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செனகல் காற்பந்து விளையாட்டாளர்களான இலிமான் நிடியாயே, இஸ்மைலா சார் ஆகிய இருவருக்கும் ஆப்பிரிக்கக் காற்பந்துச் சம்மேளன ஏற்பாட்டில் நடக்கும் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளுக்கான காற்பந்துக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் மொரோக்கோவை செனகல் 1-0 என்ற எண்ணிக்கையில் வென்று கிண்ணத்தைத் தட்டிச் சென்றாலும் இந்தத் தடை அக்குழுவுக்குப் புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள செனகல் குழுவில் பயிற்றுவிப்பாளர் பாப்பே இந்த நடவடிக்கையின் விளைவாகக் கலந்துகொள்ள முடியாது.

குறிப்புச் சொற்கள்