ஜோகூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், கோளமீனைச் (pufferfish) சாப்பிட்ட பிறகு இறந்துவிட்டார். அவருடைய கணவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அந்த 83 வயது மாதும் 84 வயதான அவருடைய கணவரும் சமூக ஊடகம் வழியாக மீன் வணிகரிடமிருந்து அந்த மீனை வாங்கியதாக ஜோகூர் சுகாதார, ஐக்கியக் குழுத் தலைவர் லிங் தியென் சூன் தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை அத்தம்பதி மீனைப் பெற்றுக்கொண்டனர்.
"மதிய உணவுக்காக அவர்கள் அந்த மீனைச் சுத்தப்படுத்தி, சமைத்தனர். பிற்பகல் 3 மணியளவில் அந்த மாதுக்கு நடுக்கம் ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டார்," என்று தி ஸ்டார் செய்தித்தளத்திடம் திரு லிங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) கூறினார்.
"ஒரு மணி நேரம் கழித்து, அவருடைய கணவரிடமும் அதேபோன்ற அறிகுறிகள் தென்பட்டன," என்றார் திரு லிங்.
அத்தம்பதியின் மகன் அவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்.
"அந்த மாது இறந்துவிட்டதாக இரவு 7 மணியளவில் உறுதி செய்யப்பட்டது. அவருடைய கணவர் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்," என்று திரு லிங் குறிப்பிட்டார்.
அத்தம்பதியர் அந்த மீன் வகையைச் சாப்பிட்டது இதுவே முதன்முறை என அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூரின் கரையோரப் பகுதியான மெர்சிங்கில் மீனவர் அந்த மீனைப் பிடித்ததாக திரு லிங் கூறினார். பத்து பகாட்டில் விநியோகிப்பாளர் ஒருவர் அந்த மீனைப் பதப்படுத்தினார்.
அந்த மீன் வணிகரும் பத்து பகாட்டைச் சேர்ந்தவர். இணையத்தில் அவர் அந்த மீனை விற்றார்.
பதினைந்து கிலோ மீன் நான்கு வாடிக்கையாளர்களிடம் விற்கப்பட்டது.
"மீனை உட்கொண்ட தம்பதியரைத் தவிர்த்து, மற்ற வாடிக்கையாளர்கள் அதை இன்னும் சாப்பிடவில்லை. இந்நிலையில், மீன் வியாபாரியிடருந்து மீன் மாதிரிகளை சுகாதாரத்துறை பெற்றுள்ளது.
"தாங்கள் உண்ணும் உணவு பற்றி கவனமாக இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்," என்று திரு லிங் கூறினார்.


