ஊதிய உயர்வு போதாது: இங்கிலாந்தில் மருத்துவர்கள் போராட்டம்

2 mins read
f2dda05c-f385-48ce-9f19-be50f221d64d
இங்கிலாந்தில் சம்பள உயர்வை எதிர்த்து 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் அறிவித்தனர். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலாந்தில் சம்பள உயர்வு போதாது எனக் கூறி, இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (பிஎம்ஏ) திங்கட்கிழமை வெளியிட்டது.

அவர்கள் ஆகஸ்ட் மாதம் 24, 25ஆம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.முன்னதாக, அவர்கள் ஜூலை மாதம் 20, 21ஆம் தேதிகளிலும் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்த 6 விழுக்காடு ஊதிய உயர்வு தங்களுடைய உழைப்புக்கேற்ற அளவிற்கு இல்லை எனக் கூறி, அதனை மருத்துவச் சங்கம் (பிஎம்ஏ) நிராகரித்தது.

“நான் பல மாதங்களாக மேற்கொண்டுவரும் தொழில்துறை நடவடிக்கையின் அடிப்படையில் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வுதான் அளிக்க முடியும். மேலும் இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. இதற்கே பல பில்லியன் பவுண்டு செலவாகும்,” என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.

ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தி, தங்களின் கோரிக்கையை ஏற்கும்படி அரசை வற்புறுத்தும் சூழலில், மருத்துவர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“மருத்துவர்களின் நிபுணத்துவத்தை மதிப்பிழக்கச் செய்யும் அரசாங்கத்தின் இந்த செயல் பொதுத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் நடந்துகொள்வதால் எங்களுக்கு போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை,” என பிரிட்டிஷ் மருத்துவச் சங்கத்தின் (பிஎம்ஏ) தலைவர் மருத்துவர் விஷால் சர்மா கூறினார்.

இந்த வேலைநிறுத்த நாள்களில் பெரும்பாலான மருத்துவச் சேவைகள் ரத்து செய்யப்படும். ஆனால், அவசரச் சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என மருத்துவச் சங்கம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்