மலேசியாவில் தனிமையை எதிர்கொள்ளும் மூத்தோர்

மலேசியாவில் தனிமையை எதிர்கொள்ளும் மூத்தோர்

2 mins read
7bcfbd75-b854-4a7e-8315-585df5907eb2
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர். - படம்: ‌ஷட்டர்ஸ்டாக்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் மூப்படையும் சமூகம் பெரிதாகி வருகிறது.

அந்நாட்டில் அதிகரித்துவரும் மூத்த குடிமக்களைக் கவனித்துக்கொள்ள கூடுதல் சமூக ஆதரவு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் அப்பிரச்சினை ஒரு கொள்ளைநோய்ப் பரவலைப்போல் உருவெடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மலேசியாவில் மூப்படைந்துவரும் சமூகத்துக்கேற்ப அந்நாட்டில் போதுமான அளவு பராமரிப்பு நிலையங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அச்சம் உருவெடுத்துள்ளது.

மலேசியாவில் சரியான சமூக ஆதரவு இல்லாத மூத்தோரின் விகிதமும் அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் 30.8 விழுக்காட்டு மூத்தோருக்கு சரியான சமூக ஆதரவு கிடைக்கவில்லை. அவ்விகிதம் சென்ற ஆண்டு 33.1 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.

சென்ற ஆண்டுக்கான மலேசியாவின் தேசிய சுகாதார, நோய் ஆய்வில் (National Health and Morbidity Survey) இவ்விவரங்கள் தெரிய வந்துள்ளன.

“மேலும் வலுவான சமூக உள்கட்டமைப்பு இல்லாமல் போனால் ‘தனிமைப் பரவல்’ (loneliness epidemic) உருவெடுக்கக்கூடும். அது, குடும்பங்கள், மருத்துவமனைகள், பொருளியல் ஆகியவற்றுக்கு நெருக்குதல் அளிக்கக்கூடும்,” என்று மலேசிய மாதர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

தனிமைப் பரவல் என்பது பெரிய அளவில் மக்களைப் பாதிக்கும், சமூக அளவில் காணப்படும் தனிமையையும் அவர்கள் ஒதுக்கப்படுவதையும் குறிப்பிடுவதாகும்.

மலேசியா, எதிர்பார்க்கப்பட்டதையும்விட வேகமாக மூப்படைந்து வருகிறது. அதன் மூப்படையும் விகிதம் ஜப்பானின் மூப்படையும் விகிதத்தில் 1.5 மடங்காகப் பதிவாகியுள்ளது.

ஜப்பானுடன் ஒப்பிடும்போது மலேசியாவில், ஒரு நூற்றாண்டில் காணப்படவேண்டிய சமுதாய ரீதியான மாற்றங்கள் 50, 60 ஆண்டுகாலத்தில் காணப்படுவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

வரும் 2048ஆம் ஆண்டுக்குள் மலேசியாவில் ஐந்தில் ஒருவர் 60 வயது அல்லது அதையும் தாண்டியிருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிவரப் பிரிவு வெளியிட்ட 2020-2060 ஆண்டிற்கான மக்கள்தொகை முன்னுரைப்புப் புள்ளிவிவரங்களில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

வரும் 2048ஆம் ஆண்டுக்குள் மலேசியா மூப்படைந்த தேசமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக சென்ற ஆண்டு வெளியான செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்