மணிலா: இந்தோனீசியாவில் மரண தண்டனையிலிருந்து தப்பித்த பிலிப்பீன்ஸ் மாது, டிசம்பர் 18ஆம் தேதி காலை மணிலா திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக 2015ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
39 வயது மேரி ஜேன் வெலோசோ இல்லப் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவர். இரு பிள்ளைகளுக்குத் தாயான அவர், பிலிப்பீன்சில் புதுவாழ்வைத் தொடங்க விரும்புவதாக ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு யோக்யகார்த்தாவில் அவர் கைது செய்யப்பட்டார். 2.6 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை ஒரு பெட்டியில் மறைத்து எடுத்துச் சென்றபோது அவர் பிடிபட்டார்.
‘பாலி நைன்’ எனும் போதைப்பொருள் குற்றக் கும்பலின் எஞ்சிய உறுப்பினர்கள் ஐவர் இந்தோனீசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டதை அடுத்து வெலோசோ விடுவிக்கப்பட்டார்.
மணிலா விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் மகளிருக்கான சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மணிலா விமான நிலையத்தில் அவருக்காகக் காத்திருந்த குடும்பத்தினரோ ஆதரவாளர்களோ அவரைக் காண அனுமதிக்கப்படவில்லை.
குடும்பத்தினர் வெலோசோவைச் சிறைச்சாலையில் பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வெலோசோ தாயகம் அனுப்பப்படுவது தொடர்பில் இந்தோனீசிய, பிலிப்பீன்ஸ் அரசாங்கங்கள் டிசம்பரில் இணக்கம் கண்டன.
இந்தோனீசிய நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையை மதிப்பதாகவும் அவரைக் கைதியாகக் கருதவும் பிலிப்பீன்ஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து அவ்வாறு இணக்கம் காணப்பட்டது.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பாக வெலோசோ தாயகம் திரும்பும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட இந்தோனீசிய அரசாங்கத்திற்கு பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் என்ரிக் மனாலோ நன்றி தெரிவித்துக்கொண்டார்.