சோல்: புறாக்களுக்கு உணவளித்தால் ஜூனிலிருந்து 1 மில்லியன் வான் அபராதம்

சோல்: புறாக்களுக்கு உணவளித்தால் ஜூனிலிருந்து 1 மில்லியன் வான் அபராதம்

2 mins read
951197ff-33c1-4208-97c6-c38cdc615ef7
மலைகளில் வாழும் காட்டுப் புறாக்கள், எளிதில் உணவு கிடைக்கக்கூடிய பகுதிகளில் வாழத் தொடங்கியுள்ளதாகத் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: கொரிய பிஸ் வயர்

சோல்: தென் கொரியத் தலைநகர் சோலில் புறாக்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சோலில் உள்ள முக்கியப் பகுதிகளிலும் பூங்காக்களிலும் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் அறிவிப்புகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

புறாக்களுக்கு உணவளிக்க ஒருசில இடங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் ஜூன் மாதம் முழுவதும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சோல் பெருநகர அரசாங்கம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 38 இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பது தடை செய்யப்பட்டது. சோல் பிளாசா, குவாங்வாமுன் சதுக்கம், சோல் ஃபாரஸ்ட், ஹாங்காங் பூங்காவில் உள்ள 11 பகுதிகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

மூன்று மாதங்களுக்கு அங்கு நேரடி வழிகாட்டுதல் நடவடிக்கைகளும் விழிப்புணர்வு இயக்கங்களும் நடத்தப்பட்டன. அதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து புறாக்களுக்கு உணவளிப்போருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் புறாக்களுக்கு உணவளித்ததற்காக முதன்முறை பிடிபடுவோருக்கு 200,000 வான் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டாவது முறை பிடிபடுவோருக்கு 500,000 வான் அபராதமும் மூன்றாவது முறையிலிருந்து பிடிபடுவோருக்கு 1 மில்லியன் வான் அபராதமும் விதிக்கப்பட்டன.

மலைகளிலும் இயற்கை வாழ்விடங்களிலும் வசிக்கும் காட்டுப் புறாக்கள், எளிதில் உணவு கிடைக்கக்கூடிய நகரங்களில் வாழத் தொடங்கியுள்ளன.

குடியிருப்பாளர்களும் சுற்றுப்பயணிகளும் அவற்றுக்கு உணவளிப்பதால் நகரங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, புறா எச்சங்கள், தூய்மைகேடு உள்ளிட்ட புகார்களும் தலைதூக்கியுள்ளன.

“காட்டு விலங்குகளுக்கு உணவளிக்காமல் இருப்பது, உணவுக் கழிவுகளைச் சரிவரப் பராமரிப்பது ஆகியவை மூலம் தூய்மையான, ஆரோக்கியமான சுற்றுப்புறத்தை உருவாக்க முடியும்,” என்றார் சோல் பெருநகர் அரசாங்கத்தின் இயற்கை சூழலியல் பிரிவுத் தலைவர் லீ சாங் ஹூன்.

குறிப்புச் சொற்கள்