சோல்: தம்பதியர் பிள்ளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க $6.4 பில்லியன் ஒதுக்கீடு

2 mins read
36421d5b-8a11-4559-bc11-2de691f9e83b
குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சிகளின் ஓர் அங்கமாகக் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக சோல் நகர நிர்வாகம் தெரிவித்தது. - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவின் சோல் நகர நிர்வாகம், பிள்ளை வளர்ப்பில் தம்பதியர்க்குக் கைகொடுக்கும் நோக்கில் 6.7 டிரில்லியன் வோன் (6.4 பில்லியன் வெள்ளி) ஒதுக்கவிருக்கிறது.

அடுத்த ஈராண்டுகளுக்கு (2025, 2026) இந்த நிதி ஒதுக்கப்படுவதாக சோல் நகர அதிகாரிகள் அக்டோபர் 29ஆம் தேதி தெரிவித்தனர்.

குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கத் தற்போது நடப்பில் உள்ள திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக அவர்கள் கூறினர்.

குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சிகளின் ஓர் அங்கமாகக் கடந்த பிப்ரவரி மாதம் அத்திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், முன்னர் கருவள சிகிச்சை மேற்கொள்ளும் அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்பட்டது. தம்பதியரின் வருவாய் நிலையின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் இல்லை என்பதுடன் பல குழந்தைகள் கொண்ட குடும்பத்தினர் சமூக நன்மைகளை அடைவதற்கான தடைகள் இதன் மூலம் குறைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின்கீழ் 35 புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இவற்றையும் சேர்த்து மொத்தம் 87 கொள்கைகள் பிள்ளை வளர்ப்பு தொடர்பில் செயல்படுத்தப்படும்.

திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளோரும் விரைவில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் சாத்தியம் உள்ள ஆனால் இன்னும் சொந்த வீடு வாங்காத தம்பதியருக்கும் ஆதரவு வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

வரும் ஜனவரி மாதத்திலிருந்து சோல் நகர நிர்வாகம், சொந்த வீட்டில் வசிக்காத, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக்கொண்ட குடும்பங்களுக்குப் புதிய நிதியாதரவை வழங்கும். அடுத்த ஈராண்டுகளுக்கு வீடமைப்பு மானியமாக மொத்தம் 720,000 வோன் அல்லது மாதம் 30,000 வோன் நிதி வழங்கப்படும்.

நிதிச் சுமையால் பிள்ளை பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்த மானியம் வரையறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

முதற்கட்டமாக அடுத்த ஆண்டு 1,380 குடும்பங்கள் இதனால் பயனடையும். பின்னர் 2026ல் 4,140 குடும்பங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்.

புதிதாகத் திருமணம் செய்துகொண்டோர் நீண்டகால அடிப்படையில் அடுக்குமாடி வீடுகளைக் குத்தகைக்கு எடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், ஊழியர்கள் மகப்பேற்று விடுப்பில் செல்லும்போது தற்காலிமாக மாற்று ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு, ஆறு மாத காலத்திற்கு 200,000 வோன் மாதாந்தர மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மகப்பேற்று விடுப்பில் சென்ற சக ஊழியரின் வேலைகளையும் சேர்த்துச் செய்யும் ஊழியர்களுக்கு ஓராண்டுக்கு 100,000 வோங் மாதாந்தர படித்தொகை வழங்கப்படவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்