சோல்: தென்கொரியாவின் சோல் பெருநகர அரசாங்கம் புதைகுழி விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க நிலச்சரிவுக் கண்காணிப்புக் கட்டமைப்பை அறிமுகம் செய்யவிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அறிவித்துள்ளது.
மார்ச் 24ஆம் தேதி சோலின் கிழக்கில் உள்ள காங்டொங்-கு பகுதியில் 20 மீட்டர் அகலத்திலும் 18 மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட புதைகுழியில் மோட்டார்சைக்கிளோட்டி விழுந்து மாண்டார். அதையடுத்து புதைகுழி தொடர்பான விபத்துகள் குறித்த கவலை அதிகரித்தது.
விபத்தைத் தொடர்ந்து பல்வேறு புதைகுழிகள் தென்பட்டதால் பொதுமக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. தலைநகர் சோலில் மட்டும் 50க்கும் அதிகமான இடங்களில் புதைகுழிகள் உருவாவதற்கான அபாயம் இருப்பது அடையாளங்காணப்பட்டிருக்கிறது.
புதிய நிலச்சரிவுக் கண்காணிப்புக் கட்டமைப்பில் பூமிக்குக் கீழ் 20 மீட்டர் ஆழத்தில் வௌவால் வடிவிலான உணர்கருவிகள் பொருத்தப்படும். அது 50 மீட்டர் சுற்றளவில் உள்ள புவியியல் மாற்றங்களைக் கண்டறிந்து மத்தியக் கண்காணிப்பு நிலையத்துக்குத் தகவல் அனுப்பும். புதைகுழிகள் அடையாளங்காணப்பட்டால் தகுந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வர்.
இதற்குமுன் பெருநகர அரசாங்கம் பயன்படுத்திய நில ஊடுருவல் ரேடார் கண்காணிப்பு முறையைவிட அது மேம்படுத்தப்பட்டது.
மே மாதத்துக்குள் சோல் பெருநகர அரசாங்கம் புதிய கண்காணிப்புக் கட்டமைப்பை மார்ச் மாதம் ஏற்பட்ட புதைகுழிக்கு அருகே உள்ள கட்டுமானப் பணி நடைபெறும் தளத்தில் பொருத்தத் திட்டமிட்டிருக்கிறது.
புதைகுழி உருவான சமயத்தில் சோலின் ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. புதைகுழிக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
நிலத்தடி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தென்கொரிய மத்திய அரசாங்கமும் 2.27 பில்லியன் வான் நிதியை அதன் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கியது.