யூனுக்கான தீர்ப்பை முன்னிட்டு தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்றத்தைச் சுற்றித் தடுப்புகள்

1 mins read
be4737a6-3f51-443a-ac7f-c4359411644f
சோல் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகே காவல்துறையினர். - படம்: ஏஎஃப்பி

சோல்: வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்தது; அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வெளியே நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தலைநகர் சோலில் உள்ள அரசியலமைப்பு நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மட்டுமின்றி பல தனிநபர் ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன. யூன் ஆதரவாளர்கள், அவரை எதிர்ப்பவர்கள் என இரு தரப்பினரும் கூடாரம் அமைத்து இரவு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

சோல் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் 100 மீட்டர் சுற்று வட்டாரத்தை செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 1) தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பரப்பளவு இப்போது 300 மீட்டருக்கு அதிகரிக்கப்படும் என்றும் காவல்துறைப் பேருந்துகளைக் கொண்டு தடுப்புகள் போடப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் காவல்துறை அதிகாரிகளின் கடமைச் செயல்பாட்டுச் சட்டப் (Act on the Performance of Duties by Police Officers) பிரிவு 5, 6க்குக்கீழ் காவல்துறையினர் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்