சோல்: தென்கொரியத் தலைநகர் சோலின் உள்ளூர் பெருவிரைவு ரயிலில் சனிக்கிழமை (மே 31) வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டது.
அச்சம்பவத்தால் 300 மில்லியன் வோனுக்கும் (281,484 வெள்ளி) அதிக மதிப்பிலான சேதம் ஏற்பட்டது என்று அந்நாட்டின் தீயணைப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) தெரிவித்தனர்.
அந்தத் தீயால் ரயிலின் ஒரு பகுதி முழுமையாக அழிந்துபோனது. மேலும் இரு ரயில்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி தி கொரிய ஹெரால்ட் ஊடகம் இத்தகவல்களை வெளியிட்டன.
இச்சம்பவத்துக்கு நிதி இழப்பீடு கோரி சந்தேக நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில் கட்டமைப்பை நிர்வகிக்கும் சோல் மெட்ரோ அமைப்பு யோன்ஹாப்பிடம் தெரிவித்தது. சந்தேக நபரைத் தற்போது தென்கொரியக் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.
சந்தேக நபர், தான் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கில் அண்மையில் விதிக்கப்பட்ட தீர்ப்பில் உடன்பாடு இல்லாமல் கோபமடைந்ததால் இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று தி கொரிய ஹெரால்ட் குறிப்பிட்டது.
இச்சம்பவம் மாப்போ (Mapo) நிலையத்துக்கு அருகே நிகழ்ந்தது. சந்தேக நபர் ரயிலில் ‘தின்னர்’ ரசாயனத்தை ஊற்றி தீ மூட்டியதாகக் கூறப்படுகிறது.

