சோல்: திருமணமாகாத பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து தென்கொரிய அரசாங்கம் ஆராயும் என்று அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
நடிகர் ஜுங் வூ சுங்கும் மாடல் மூன் கா பியும் திருமணம் செய்துகொள்ளாமலேயே தங்கள் குழந்தையை வளர்க்கத் திட்டமிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சோலில் குறைவான பிறப்பு விகிதத்தைக் கையாளும் உத்தியின் ஒரு பகுதியாக திருமணமாகாத பெற்றோருக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு யூன் சுக் யோல் அரசாங்கம் ஆதரவு வழங்குமா என்று அதிபர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “தற்போதுள்ள கொள்கைகளால் முழுமையாகச் சமாளிக்க முடியாத பிரச்சினைகளும் சமூகத்தில் பாரபட்சமும் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்று அவர் பதிலளித்தார்.
“ஒவ்வோர் உயிரும் பாரபட்சமின்றி, உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வளர்வதை உறுதிசெய்ய எத்தகைய ஆதரவை வழங்கலாம் என்பது குறித்து நாங்கள் மேலும் ஆராய வேண்டியுள்ளது,” என்றார் அவர்.
தென்கொரியாவில், குழந்தைப் படித்தொகை போன்ற குழந்தையை மையமாகக் கொண்டுள்ள ஆதரவுக் கொள்கைகள் இருப்பதை அந்த மூத்த அதிகாரி சுட்டினார். பெற்றோரின் திருமண நிலை எதுவாக இருந்தாலும், அந்தக் கொள்கைகள் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.
சென்ற ஆண்டு, மொத்தக் குழந்தைப் பிறப்பில் 4.7 விழுக்காட்டு குழந்தைகள், திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தைகளாகும். அத்தகைய குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 10,900.
தென்கொரியா 1981ஆம் ஆண்டில் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து பதிவாகியுள்ள ஆக அதிகமான எண்ணிக்கை அது.

